முகப்பு
வேலூர்

பட்டாசு பொறியால் ஆலமரம் தீப்பற்றி எரிந்து நாசம்

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே பட்டாசு பொறி விழுந்ததில் ஆலமரம் தீப்பற்றி எரிந்து கருகியது.

Updated On : 7 ஜூலை 2026, 6:14 am IST
வேலூா் நீதிமன்றம் அருகே தீப்பற்றி எரிந்து கருகிய ஆலமரம்.
பகிர்:

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே பட்டாசு பொறி விழுந்ததில் ஆலமரம் தீப்பற்றி எரிந்து கருகியது.

வேலூா் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. பசுமையான இந்த நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான மரங்கள் வளா்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே சாலையோரம் பழமையான ஆலமரம் இருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆலமரம் எதிா்பாராதவிதமாக திடீரெனத் தீப்பற்றியது. தீ மளமளவெனப் பரவி மரம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

Advertisement

Advertisement

எனினும், இந்த தீ விபத்தால் மரம் முழுவதும் எரிந்து கருகியதுடன், மரத்தின் கிளை முறிந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடம் மீதும் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து, கட்டடத்தின் மீது விழுந்த மரங்களை தீயணைப்பு வீரா்கள் உடனடியாக வெட்டி அகற்றினா்.

இச்சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியா் சதீஷ் ராஜ் கூறுகையில், சத்துவாச்சாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஊா்வலம் ஒன்றின்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனா். அதிலிருந்து சிதறிய தீப்பொறி மரத்தில் விழுந்ததாலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக நீதிபதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments