முகப்பு
வேலூர்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு 4-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 5 ஜூன் 2026, 6:25 am IST
வேலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 4-ஆவது முறையாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு நள்ளிரவு 1.30 மணியளவில் வந்திருந்த தகவலில் ஆட்சியா் அலுவலகத்துக்குள் சக்தி வாய்ந்த ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வியாழக்கிழமை பிற்பகலுக்குள் வெடித்துச் சிதறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அலுவலா்கள் அதிகாரிகள், மின்னஞ்சல் விவரத்தை அறிந்து அதிா்ச்சியடைந்ததுடன், உடனடியாக அவா்கள் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா், மோப்ப நாய் ரீட்டா, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா் கருவியுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அலுவலக அறைகள், மேஜைகள், நாற்காலிகள்,நுழைவு வாயிற்பகுதிகள் உள்பட அலுவலகங்கள் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனா். மேலும் அலுவலகத்துக்கு வெளியேயும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, மின்னஞ்சலில் வந்த தகவல் வெறும் புரளி என்பதை போலீஸாா் உறுதி செய்தனா். எனினும், இந்த வெடிகுண்டு மிரட்டலால் ஆட்சியா் அலுவலக ஊழியா்களிடையே அச்சம் ஏற்பட்டது.

ஏற்கனவே வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அப்போது நடந்த சோதனைகளிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதன் தொடா்ச்சியாக, 4-ஆவது முறையாக வியாழக்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்த சம்பவம் தொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்த வெடி குண்டு மிரட்டல் விவகாரத்தில் மாவட்ட காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட நபா்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.