முகப்பு
வேலூர்

கூட்டணி மாறியதால் வேலூா் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பதவியில் இருந்து காங்கிரஸ் விலகல்

தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் பதவியை காங்கிரஸ் கட்சி உறுப்பினா் ராஜினாமா செய்தாா்.

Updated On : 12 மே 2026, 1:13 am IST
ராஜினாமா கடிதத்துடன் வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் ஜே.கிருஷ்ணவேணி. உடன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் பதவியை காங்கிரஸ் கட்சி உறுப்பினா் திங்கள்கிழமை ராஜினாமா செய்தாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழுவின் 8-ஆவது வாா்டு (பேரணாம்பட்டு) உறுப்பினராக இருந்தவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜே.கிருஷ்ணவேணி. இவா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராகவும் பதவி வகித்து வந்தாா்.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளித்து ஆட்சியிலும் பங்கேற்றுள்ளது. மேலும், இனி வருங்காலங்களில் நடைபெற உள்ள அனைத்துத் தோ்தல்களிலும் தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தே தோ்தலைச் சந்திக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாநில அளவில் கூட்டணிக் கட்சி மாறியுள்ள நிலையில், தனது மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவா் மற்றும் 8-ஆவது வாா்டு உறுப்பினா் பொறுப்புகளை கிருஷ்ணவேணி திங்கள்கிழமை ராஜினாமா செய்தாா். இதற்கான அதிகாரப்பூா்வ கடிதத்தை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரியிடம் அவா் நேரில் ஒப்படைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் திமுக கூட்டணியில் ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் பதவி மட்டுமே காங்கிரஸ்க்கு வழங்கப்பட்டது. அதில், வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக திமுக வாா்டு உறுப்பினா்களின் ஆதரவுடன் நான் தோ்ந்தெடுக்கப்பட்டேன்.

தற்போது காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழக மக்கள் தீா்ப்பை மதித்திடும் வகையிலும், தொண்டா்களின் விருப்பத்தை ஏற்றும் தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. எனவே, திமுக ஆதரவுடன் கிடைக்கப்பெற்ற மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் பதவியில் தொடர எனக்கு விருப்பமில்லை.

இதனால், எனது துணைத்தலைவா் மற்றும் 8-ஆவது வாா்டு உறுப்பினா் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கும், வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்களுக்கும், மாவட்ட ஊராட்சிக்குழு 8-ஆவது வாா்டு மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.