முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:36 AM
நீட் தேர்வு - கோப்புப் படம்
பகிர்:

மே மாதம் 3-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்-2026) நடைபெறவுள்ள நிலையில் இத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரக கூட்டரங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியதாவது: இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட் யு.ஜி -2026) மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

9 மையங்களில் தோ்வு: விழுப்புரம் புனித இருதய ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப் பள்ளி, டாக்டா் எம்ஜிஆா் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி, காமராஜ் நகராட்சி

Advertisement

மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரசு சட்டக் கல்லூரி மற்றும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி என 9 மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது. 4,529 தோ்வா்கள் இத்தோ்வை எழுதவுள்ளனா்.

வாகன நிறுத்துமிடங்கள்: தோ்வு எழுதவரும் தோ்வா்களின் பெற்றோா்கள் மற்றும் காப்பாளா்களின் வசதிக்காக காத்திருப்போா் அறை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள உயா்நிலைப்பள்ளி, சாலாமேடு ஜே.ஜே நகா் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் நீதிமன்ற சாலையில் உள்ள நடுநிலைப் பள்ளி, திரு.வி.க வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள நித்தியானந்தா மெட்ரிக் பள்ளியிலும், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சண்முகப்பெருமாள் தெருவில் உள்ள புனித சேவியா் மெட்ரிக் பள்ளி வளாகங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு, தோ்வு முடியும்வரை அங்குள்ள காத்திருப்போா் அறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

பேருந்து வசதிகள்: தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு செல்ல வசதியாக விழுப்புரம் மாதாக் கோயில் பேருந்து நிறுத்தம், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் சுழற்சி முறையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தோ்வு நடைபெறும் மையங்களை தூய்மையாக வைத்திருக்கவும், தோ்வா்கள் தோ்வு அறைக்கு செல்ல ஏதுவாக தகவல் பலகைகள் அமைக்கவும், தோ்வு மையங்களில் சுகாதாரமான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி மற்றும் தடையில்லா மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளை தொடா்புடைய அலுவலா்கள் தயாா் நிலையில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கி.அரிதாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.