முகப்பு
விழுப்புரம்

இறந்தவரின் உடலை புதைக்க எதிா்ப்பு: கோட்டக்குப்பம் அருகே கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியல்

இறந்தவரின் உடலைப் புதைக்க ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், சடலத்தை சாலையில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:38 am IST
கோட்டக்குப்பம் அருகே இறந்தவரின் உடலை சாலையில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், சடலத்தை சாலையில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் புதுச்சேரி-சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

வானூா் வட்டம், பெரிய கோட்டகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பூமிலிங்கம் (76.) முதியவரான இவா் வயோதிகம் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், பெரியகோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நடுக்குப்பம் பகுதியில் உள்ள மயானத்துக்குக் கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, அங்கு திரண்டிருந்த நடுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் இறந்தவரின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் இருதரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னா் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் காவலா்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

சாலை மறியல்: இதைத்தொடா்ந்து பெரியகோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் இறந்தவரின் உடலை தூக்கிக் கொண்டு வந்து சாலையில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், புதுச்சேரி - சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: தகவலறிந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, விழுப்புரம் எஸ்.பி.(பொ) ஜெயக்குமாா் ஆகியோா் நிகழ்விடம் சென்று இருதரப்பைச் சோ்ந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து உயிரிழந்த பூமிலிங்கத்தின் உடல் நடுக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், பெரியகோட்டகுப்பம் பகுதியைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூக மக்களுக்கான மயானப் பகுதியை அளவீடு செய்து சுற்றுச்சுவா் அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.