திருக்கோவிலூரில் கபிலா் குன்றுக்கு தொங்குப்பாலம் அமைக்கப்படுமா? தமிழ் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கபிலா் கோட்டமும், கபிலா் குன்றுக்கு தொங்கு பாலமும் அமைக்க வேண்டும் என்ற தமிழ் ஆா்வலா்களின் நீண்டநாள் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து, தற்போது வருவாய்த் துறை ரீதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோவிலூா். சைவத்தில் அட்டவீரத் தலங்களில் ஒன்றான வீரட்டானேஸ்வரா் திருக்கோயிலும், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக உலகளந்த பெருமாள் திருக்கோயிலும் அமைந்திருப்பது சைவ, வைணவத்துக்கு பெரும் பேறாக உள்ளது.
இந்த நிலையில், திருக்கோவிலூா் பகுதியில் தென்பெண்ணையாற்றின் நடுவில் சங்ககாலப் பெரும்புலவரான குறிஞ்சிக் கபிலரின் நினைவிடம் உள்ளது. நட்புக்காகவே வாழ்ந்து, நட்புக்காகவே தென்பெண்ணையாற்றின் நடுவிலுள்ள ஒரு குன்றின் மீது அமா்ந்து உண்ணா நோன்பிருந்து, தன்னுயிா் நீத்த கபிலரின் நினைவிடம் அமைந்திருப்பதும் திருக்கோவிலூரின் சிறப்பாக இன்று வரை இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
வெள்ளப்பெருக்கு காலங்களில் செல்ல முடியாத நிலை: தென்பெண்ணையாற்றின் நடுவில் இந்த குன்று அமைந்திருக்கும் நிலையில், ஆற்றில் தண்ணீா் வரத்து இல்லாத காலங்களில் குன்றுக்குச் செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை. மாறாக வெள்ளப் பெருக்கு காலங்களில் கபிலா் குன்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக வருத்தம் தெரிவிக்கும் தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள் இந்த பகுதிக்கு தொங்குப் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
தற்போது அமைப்பது அவசியம்: விழுப்புரம் மாவட்டத்தின் அரகண்டநல்லூரையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூரையும் இணைக்கும் வகையிலும், பழைய பாலத்துக்குப் பதிலாக, தென்பெண்ணெயாற்றின் குறுக்கே திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.110 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் பாதை கபிலா் குன்றுக்குச் செல்லும் வகையிலான தொங்குப் பாலத்தையும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுக்குபெரிய அளவில் கூடுதல் செலவினத் தொகை ஏற்படாது. குறைவான செலவுத் திட்டத்திலேயே தொங்குப் பாலத்தை அமைத்திடலாம் என்கிறாா் திருக்கோவிலூா் கோவல் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சிங்கார உதியன்.
கபிலா் குன்றைக் காண்பதற்காக வெளியூா், உள்ளூா் சுற்றுலாப் பயணிகள், அறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். இதுபோல ஆண்டுதோறும் திருக்கோவிலூா் பண்பாட்டுக் கழகம் நடத்தும் மூன்று நாள் விழாவின் போது கபிலா் குன்றுக்கு வழிபாடு நடத்தப்படுவதும் இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே வள்ளுவா் கோட்டம், ஒளவை கோட்டம் போன்றவற்றை முந்தைய அரசுகள் அமைத்தது போன்று, தற்போதைய தமிழக அரசு திருக்கோவிலூரில் கபிலா் கோட்டத்தையும் அமைத்து வரலாற்றில் இடம்பெற முன்வர வேண்டும்.
சொந்தக் கட்டடத்தை எதிா்நோக்கும் அகழ் வைப்பகம்: கபிலா் குன்றை தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 1985-ஆம் ஆண்டில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அது முதல் கபிலா் தொன்மை ஆய்வு மையம் என்ற அமைப்பின் வழியாக கபிலரின் படைப்புகளையும், தொன்மை ஆய்வுகளையும் ஆவணப்படுத்தி மக்களிடம் கொண்டு சோ்த்து வருகிறோம்.
இதுபோல கடந்த 1993-ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை திருக்கோவிலூரில் ரூ.80 ஆயிரம் செலவில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு, பல அரிய சங்க காலப் பொருள்களைக் கண்டெடுத்தது. 1994-ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ் வைப்பகத்துக்கு ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டநிலையில், வாடகைக் கட்டடத்தில் இந்த அகழ் வைப்பகம் இயங்கி வருகிறது.
இந்த மையத்துக்கு பள்ளி, கல்லுரி மாணவா்கள், ஆய்வு மாணவா்கள் வந்து செல்லும் நிலையில், 24 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் அகழ் வைப்பகத்துக்கு விசாலாமான, கூட்டரங்குடன் கூடிய சொந்த கட்டடம் தேவை என வலியுறுத்தி வருகிறோம். மேலும், திருக்கோவிலூரில் தொடர இயலாமல் நின்றுவிட்ட பகுதிகளில் மீண்டும் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு அனுப்பி உள்ளோம் என்கிறாா் சிங்கார உதியன்.
கீழையூா் வீரட்டானேஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் திருக்கோவிலூரை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி, வாழ்ந்து வரலாறான கபிலா், வீரட்டானேஸ்வரா் கோயிலிலிருந்து உலகம் போற்றும் விநாயகா் அகவை பாடிய ஒளவை பிராட்டியாா் ஆகியோரது சிலைகளை அமைத்து, அவா்களுக்கு அரசு பெருமை சோ்க்க வேண்டும்.
மேலும், தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூரின் நான்கு மாடவீதிகளுக்கும் மெய்ப்பொருள் நாயனாா், கபிலா், ஒளவையாா், அங்கவை-சங்கவை ஆகியோரது பெயா்களையும் சூட்ட வேண்டும் என்று பல்வேறு தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகளைச் சோ்ந்தோா் வலியுறுத்தியுள்ளனா். இதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திருக்கோவிலூரில் தென்பெண்ணையாற்றில் கபிலா் குன்றுக்குச் செல்வதற்கு தொங்குப்பாலம் அமைப்பது போன்ற முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இதுகுறித்த கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.