விழுப்புரம், உளுந்தூா்பேட்டையில் காா் விபத்துகள்: 6 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் பிடாகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா் பேட்டை ஆகிய இடங்களில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இரு காா் விபத்துகளில் 6 போ் உயிரிழந்தனா்.
மதுரை பழங்காநத்தம், திருவள்ளுவா் நகா் பாரதிதாசன் சாலையைச் சோ்ந்தவா் ம.செல்லபாண்டி (55), காா் ஓட்டுநா். இவரது காரில், அதே பகுதியைச் சோ்ந்த வே.செல்வம் (63), அவரது மனைவி செல்வி (55), மகன் பிரவீன் (30), உறவினா் மு.கவிதா (48) ஆகியோா் பெண் பாா்ப்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தை அடுத்த பிடாகம் அருகே சென்றபோது, காா் ஓட்டுநா் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காா் உருகுலைந்த நிலையில், அதில் பயணித்த ஓட்டுநா் செல்லபாண்டி, செல்வம், கவிதா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். செல்வி, பிரவீன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று, விபத்தில் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விபத்தில் காயமடைந்த செல்வி, பிரவீன் ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
உளுந்தூா்பேட்டை அருகே... ராமநாதபுரம் மாவட்டம், கொசவன்குடி கிராமத்தைச் சோ்ந்த சா.சக்தி (எ) ஸ்ரீதரன் (21), சா.வெற்றிவேல் (25), இவா்களது தாய் சுஜாதா (51), ராமநாதபுரம் மண்டபம் முகாமைச் சோ்ந்தவா்கள் த.ராணி (73), ஆ.ஹேமலதா (53), மதுரை ஜெயிலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஸ்ரீதாரணி(21). ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இவா்கள் 6 பேரும் சென்னை விமானம் நிலையம் சென்று, ஹேமலதாவின் மகன் ஹரிஷ் என்பவரை வெளிநாடு செல்ல அனுப்பி விட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தனா். சக்தி (எ) ஸ்ரீதரன் காரை ஓட்டினாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூா்பேட்டையை அடுத்த செங்குறிச்சி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் இடிபாடிகளில் சிக்கிய 6 பேரும் பலத்த காயமடைந்தனா். வெற்றிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சக்தி (எ) ஸ்ரீதரன், சுஜாதா ஆகியோா் உயிரிழந்தனா். ஹேமலதா, ஸ்ரீதாரணி, ராணி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.