காவிரி: ரயில் மறியலில் ஈடுபட்ட 149 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டங்களில் 149 கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டங்களில் 149 கைது செய்யப்பட்டனர்.
கடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம் தலைமையில் அந்தக் கட்சியினர் உழவர் சந்தையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்று, திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி செல்லத் தயாராக இருந்த சோழன் விரைவு ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.குளோப், மாவட்ட விவசாயச் சங்கச் செயலர் வி.எம்.சேகர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர்கள் ஏ.பி.நாகராஜன், வி.பட்டுசாமி, மாவட்ட ஏஐடியூசி செயலர் பி.துரை உள்ளிட்ட 108 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, தமிழ் தேசிய மக்கள் கட்சியினர் தலைமை நிலைய செயலர் முல்லை உலகநாதன் தலைமையில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குவிந்தனர். எனினும், அவர்களை ரயில் நிலையத்துக்குள் காவல் துறையினர் அனுமதிக்காததால், ரயில் நிலையத்தின் வெளியே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மறியலில் ஈடுபட முயன்றதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறிஞ்சிப்பாடியில்... குறிஞ்சிப்பாடியில் ரயில் மறியலில் ஈடுபட்ட நகர, ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, குறிஞ்சிப்பாடி நகர விசிக செயலர் ம.ரா.பாலமுருகன் தலைமையில், அந்தக் கட்சியினர் பேரணியாக ரயில் நிலையத்துக்குள் வந்தனர். அப்போது, கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் செல்லத் தயாராக இருந்த பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட ஒன்றிய விசிக பொருளாளர் ரா.சரவணன், நகரத் துணைச் செயலர் ஸ்ரீதர், மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்பாபு, ஒன்றியத் துணைச் செயலர் ஜானகிராமன், குள்ளஞ்சாவடி நகரச் செயலர் அம்பேத், ஒன்றியத் துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், தொகுதித் துணை அமைப்பாளர் ஞானசேகர் உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.