மக்கள் நலனுக்காகப் போராடும் இயக்கமாக அமமுக திகழும்
அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகப் போராடும் இயக்கமாக அமமுக திகழும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகப் போராடும் இயக்கமாக அமமுக திகழும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
பல்வேறு கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி கடலூரில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சியை நம்மால் மட்டுமே கொண்டு வர முடியும். இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயரை மீட்கவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 6 கோடி வாக்காளர்களில் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் 60 சதவீதம் பேர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நமது இயக்கத்துக்கு ஆதரவாக உள்ளனர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு ஜெயலலிதாவிடம் கட்சி வந்தது. ஜெயலலிதாவுக்கு பின்பு இளைஞர்கள் கையில் கட்சி வந்துள்ளது.
வருகிற மே 31- ஆம் தேதிக்குள் கிராமம், நகரம், பேரூராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர்கள் சேர்ப்புப் பணியைத் திறம்படச் செய்ய வேண்டும். மார்ச் 15- ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், மார்ச் 25-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தஞ்சையில் விவசாயிகள் மாநாட்டையும், திருச்சியில் விமான நிலைய முற்றுகைப் போராட்டமும் நடத்தியுள்ளோம்.
தமிழக விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் போராடும் இயக்கமாக அமமுக திகழும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.