குவாரியில் மணல் அள்ளுவதை எதிர்த்து மறியல்
எனதிரிமங்கலம் கிராமத்தில் குவாரியில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 108 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
எனதிரிமங்கலம் கிராமத்தில் குவாரியில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 108 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அண்ணாகிராமம் ஒன்றியம், எனதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி அண்மையில் தொடங்கப்பட்டது.
இந்தக் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து குடிநீர், பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக்கூறி, எனதிரிமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மணல் குவாரி இயங்க அனுமதிக்க வேண்டுமென கிராம மக்களிடம், பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை கிராம மக்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில், டிஎஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எனதிரிமங்கலம் குவாரியில் மணல் அள்ள திங்கள்கிழமை ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக முன்னாள் தொகுதிச் செயலர் ராமசாமி, அண்ணாகிராமம் திமுக ஒன்றியச் செயலர் வெங்கட்ராமன், மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் தஷ்ணாமூர்த்தி மற்றும் பாமக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் திரண்டு, அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 108 பேரை புதுப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர், குவாரியில் இருந்து லாரிகள் மூலம் மணல் அள்ளிச் செல்லப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானவர்கள் கூறியதாவது: மணல் குவாரிக்கு கிராம மக்கள் 90 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மக்களின் உணர்வை அதிகாரிகள் புரிந்துக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.