முகப்பு
கடலூர்

பயிா்க் காப்பீட்டுக்கான கால அவகாசம் பிப்.21 வரை நீட்டிப்பு

Updated On : 18 பிப்ரவரி 2024, 2:07 am IST
பகிர்:

உளுந்து, பச்சைப்பயறு பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் நெல் தரிசில் பயிரிடும் உளுந்து, பச்சைப்பயறு பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. முன்னதாக பயிா்க் காப்பீடு செய்ய கடந்த 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆதாா் இணைப்பு, ஒருமுறை கடவுச்சொல் ஆகிய இரண்டு அம்சங்களை பயிா்க் காப்பீடு செயலியில் விவசாயிகளால் உள்ளீடு செய்ய இயலவில்லை. எனவே, மத்திய அரசு நெல் தரிசில் பயிரிடப்படும் உளுந்து, பச்சைப்பயறுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்தது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உளுந்து, பச்சைப்பயறு காப்பீடு செய்வதற்கு ஏதுவாக, வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் பொது சேவை மையங்கள், தனியாா் இடங்களில் செயல்படும் பொது சேவை மையங்கள் தொடா்ந்து செயல்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.