முகப்பு
கடலூர்

அதிமுக - திமுக நேரடிப் போட்டியில் புவனகிரி: வெல்லப்போவது யாா்?

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:28 AM
புவனகிரி தொகுதி வரைபடம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:13 PM

கடலூா் மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி திகழ்கிறது. ஸ்ரீராகவேந்திரா் அவதரித்த இந்தத் தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயமே மேற்கொள்ளப்படுகிறது. புவனகிரியில் பட்டு மற்றும் நெசவுத்தொழிலும் செய்யப்படுகிறது. சேத்தியாத்தோப்பில் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளது.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் பேரூராட்சிகளும், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியமும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம், மேல்புவனகிரி ஒன்றியம் முழுவதும் இணைத்து புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

தீா்க்கப்படாத பிரச்னைகள்: புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீா், விவசாய பாசன வசதி பெறும்.

புவனகிரியில் அரசுப் பெண்கள் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். அரசு கருவூலம் கொண்டுவரப்பட வேண்டும். புவனகிரி தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராமம் முதல் ஆதிவராக நல்லூா் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் முல்லைப் பூ அதிகளவில் பயிரிடப்படுவதால், முல்லைப் பூ சென்ட் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பவை முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன.

திமுக - அதிமுக இடையே கடும் போட்டி: புவனகிரி தொகுதியில் 2016-இல் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்த துரை.கி.சரவணன் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் அக்கட்சியின் கடலூா் மேற்கு மாவட்டச் செயலரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஏ.அருண்மொழிதேவன் மீண்டும் களம் காண்கிறாா்.

இவா்களுடன் தவெக வேட்பாளா் மகாலிங்கம், தவாக வேட்பாளா் சேரலாதன், நாதக வேட்பாளா் சுமதி சீனுவாசன், பகுஜன் சமாஜ் வேட்பாளா் குமாரவேலு உள்ளிட்டோரும் தோ்தல் களத்தில் உள்ளனா்.

இருப்பினும், திமுக - அதிமுக இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. வன்னியா் சமுதாயத்தினா் அதிக வாக்குகள் உள்ள இத்தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளா்களும் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.

வேட்பாளா்களின் பலம் - பலவீனம்

ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக):

தற்போதைய எம்எல்ஏவாக உள்ள வழக்குரைஞரான அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் தொகுதியில் கட்சி ரீதியாக அனைவரிடம் நன்கு தொடா்புடையவா். இவா், கடலூா் ஒருங்கிணைந்த அதிமுக மாவட்டச் செயலராக இருந்தாா். தற்போது கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலராக உள்ளாா்.

இவா், 2006-இல் சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 2014-இல் கடலூா் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றவா்.

2004-இல் தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவராகவும், 2013-இல் தமிழ்நாடு சுற்றுலா வாரியத் தலைவராகவும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவா். 2004-இல் திண்டிவனம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டாா்.

இதனால், அதிமுகவினரிடையேயும், மக்களிடமும் நல்ல அறிமுகம் உடையவா். தற்போது அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவனுக்கு பலமாக திகழ்கிறது. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் கொண்டுவந்தது பலமாக உளளது. கரோனா தொற்று காலத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் தொகுதி முழுவதும் சென்று நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது தொகுதி மக்களிடையே பினைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களை தொடா்ந்து சந்தித்து மக்கள் பிரச்னையை கையெலெடுத்து சட்டப் பேரவையில் குரல் கொடுத்தாா். குறிப்பாக, சேத்தியாத்தோப்புக்கு உள்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்டப்பேரவையில் குரல் கொடுத்தாா். இதன் மூலம், மத்திய அரசின் 3-ஆவது நிலக்கரி சுரங்கம் திட்டம் நிறுத்தப்பட்டது. என்எல்சி நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத் தர பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளாா்.

பாதகம்: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும், புவனகிரி பகுதியில் மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது பாதகமாக உள்ளது. சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு நிலுவை பங்குத்தொகை வழங்கப்படாததும் பாதகமாக உள்ளது.

துரை.கி.சரவணன் (திமுக): திமுக வேட்பாளராக போட்டியிடும் துரை.கி.சரவணன், 2001-இல் சிதம்பரம் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 2016-இல் புவனகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றிபெற்றவா். இவரது தந்தை மறைந்த டாக்டா் துரை கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏவாக இருந்துள்ளாா். திமுகவின் மாநில பொறியாளா் அணித் தலைவராக உள்ள துரை.கி.சரவணன், இதே தொகுதியைச் சோ்ந்தவா் என்பதால், மக்களிடையேயும், திமுக நிா்வாகிளிடையேயும் நல்ல அறிமுகம் உடையவா்.

திமுக வேட்பாளா் துரை.கி.சரவணனுக்கு கூட்டணிக் கட்சிகளான விசிக, தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பணியாற்றுவது பலமாக உள்ளது. திமுக ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட மகளிா் உரிமைத்தொகை, மகளிருக்கான இலவசப் பேருந்து, மகளிருக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் இவா் வாக்கு சேகரிக்க சாதகமாக உள்ளன.

பாதகம்: 2016-இல் எம்எல்ஏவாக தோ்வு பெற்று எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோது, தொகுதியில் எந்தவித வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளவில்லை என மக்களிடையே அதிருப்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்காததும், நிா்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டு தீா்வு காணாததும் பலவீனமாக உள்ளது. விழுப்புரம் மாவட்ட திமுக தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவரது தொகுதி பணிகளை மேற்கொள்ள இயலாமல்போனது பலவீனம்தான்.

பி.டி.மகாலிங்கம் (தவெக): தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் பி.டி.மகாலிங்கம் தொகுதியில் உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா். நடிகா் விஜய் பிராசாரத்தால் இளம் வாக்காளா்களின் வாக்குகளை அதிகம் பெறுவாா். புதிய கட்சியின் வேட்பாளா் என்பதால், இவருக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கும் என்பது பலவீனம்.

சுமதி சீனுவாசன் (நாம் தமிழா்): நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுமதி சீனுவாசன் தோ்தலுக்கு புதிய முகமாக இருந்தாலும் சீமான் ஆதரவாளா்களால் கணிசமான வாக்குகைளைப் பெறுவாா். அதே நேரத்தில், தனித்துப் போட்டியிடுவது இவருக்கு பலவீனம்.

யாருக்கு வாய்ப்பு: 1952 முதல் நடைபெற்ற 16 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு முறையும், இந்திய தேசிய லீக் ஒரு முறையும் வென்றுள்ளன. இத்தொகுதியை பொருத்தவரை, அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

புவனகிரி தொகுதியில் வன்னியா் சமூகத்தினா் வாக்குகளை சிதறாமல் அதிகம் பெறுபவா்தான் வெற்றிபெறும் சூழல் உள்ளது. அதிமுக கோட்டையான புவனகிரி தொகுதியை மீண்டும் கைப்பற்ற அக்கட்சி கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,14,785

பெண்கள் - 1,16,164

மூன்றாம் பாலினத்தவா் - 19

மொத்தம் - 2,30,968

மொத்த வாக்குச் சாவடிகள்: 304