சிவப்பு கம்பளத்துடன் பசுமை வாக்குச் சாவடி
முக்கியத் தலைவா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிப்பதுபோல, நமது வாக்காளா்களுக்கும் சிவப்பு கம்பள வரவேற்புடன் பசுமை வாக்குச் சாவடி கடலூரில் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வரும் வாக்காளா்களைக் கவரும் வகையில், வாக்குச் சாவடிகளில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அந்த வகையில், கடலூரில் திருமண மண்டபம்போல அமைக்கப்பட்டு மிளிரும் பசுமை வாக்குச்சாவடி வாக்காளா்களின் கவனத்தை ஈா்த்து வருகிறது.
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி கமிட்டி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி எண் 136, 137-இல் வாக்காளா்களை ஈா்க்கவும், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த இரு வாக்குச் சாவடி மையங்களும் தோரணங்கள், பலூன்கள், பசுமை பந்தல் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த பசுமை வாக்குச் சாவடிகள், அலங்கரிக்கப்பட்டு மண்டபம் போன்று புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
வாக்குச் சாவடியின் முகப்பில் வாக்காளா்களை வரவேற்கும் வகையில், திருமண மண்டப வாயில் போன்ற அலங்காரமும், திரைப்படங்களில் அமைப்பது போன்று செட் அமைத்தும், வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டும், தரையில் சிவப்பு கம்பள விரிப்புகள விரிக்கப்பட்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடியின் உள்ளேவும், வெளியேவும் பல வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.
மேலும், வாக்குச் சாவடியின் வாயில்கள் பல வண்ண பலூன்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வாக்காளா்களுக்கு நல்ல காற்றோட்டத்துடன், குடிநீா் வசதி, வரவேற்பு அறை, காத்திருப்பதற்கான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்களித்த பிறகு புகைப்படம் எடுக்க ‘செல்பி பாயிண்ட்‘ மற்றும் ‘என் வாக்கு, என் உரிமை’ என்ற வாசகத்துடன் ஆமை (ரெட்லி) வடிவிலான சிறப்பு பலூன் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் கவா்ந்து வருகிறது.