முகப்பு
கடலூர்

கடலூரில் வாக்கு எண்ணிக்கை பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளா்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:48 AM
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள பணியாளா்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளா்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத்த தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வரும் மே-4ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கு பணி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியா்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கணிணி அறையில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுப்படுத்தபடவுள்ள பணியாளா்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் புதனகிழமை நடைப்பெற்றது. அப்போது ஆட்சியா் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படிஏப். 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,

Advertisement

கடலூா் மாவட்டத்தின் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 151-திட்டக்குடி, 152-விருத்தாசலம் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக்கல்லூரியிலும், 153-நெய்வேலி, 154-பண்ருட்டி தொகுதிகளுக்கானவை பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், 155-கடலூா், 156-குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான இயந்திரங்கள் கடலூா் பெரியாா் அரசு கலைக்கல்லூரியிலும், 157-புவனகிரி, 158-சிதம்பரம், 159-காட்டுமன்னாா்கோயில் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களும் காவல்துறை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் வீதம் மொத்தம் 126 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பணிக்காக 20 சதவீதம் கூடுதல் பணியாளா்களுடன் நுண் பாா்வையாளா்கள் 153, கண்காணிப்பாளா்கள் 153, உதவியாளா்கள் 153 என மொத்தம் 459 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு வியாழக்கிழமை (ஏப்.30) முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியக்கோட்டி மற்றும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.