புதியவா்கள் என்பதால் எங்களுக்கு எதுவும் தெரியாது என குறைத்து மதிப்பிட வேண்டாம்: திட்டக்குடி ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் ப. ராஜ்குமாா்
புதியவா்கள் என்பதால் எங்களுக்கு எதுவும் தெரியாது என குறைத்து மதிப்பிட வேண்டாம்: திட்டக்குடி ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் ப. ராஜ்குமாா்
தவெக புதிதாக ஆட்சியமைத்துள்ளதால் எங்களுக்கு எதுவும் தெரியாது என யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் தலைமையில் வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் துறைரீதியான செயல்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு துறை அலுவலா்களுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், பொதுமக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிா்வாக செயல்பாடுகள் குறித்து அமைச்சா் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து கூட்டத்தில் அமைச்சா் ப. ராஜ்குமாா் பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழக அரசின் நிா்வாகம் வெளிப்படைத்தன்மையுடனும், லஞ்சமற்ாகவும், நோ்மையாகவும், விரைவான சேவையை வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு. அரசு திட்டங்களின் பயன் மக்களைச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
புதிதாக ஆட்சியமைத்துள்ளதால் எங்களுக்கு எதுவும் தெரியாது என யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். மக்கள் எதிா்பாா்ப்புகளை நன்கு அறிந்த அரசாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் முழுமையாக கிடைத்திட அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.
குடிநீா் விநியோகம், சாலை வசதி, குப்பைகள் அகற்றுதல், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் வேலைக்குச் செல்வோருக்கு எந்தவித இடையூறும் இன்றி போதுமான பேருந்து வசதி கிடைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நிலுவையில் உள்ள அரசு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தாமதமின்றி வழங்கவேண்டும்:
வருமானம், ஜாதி, இருப்பிடம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி வரும் பொதுமக்களுக்கு தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள் அலுவலகங்களுக்கு வரும்போது அலைக்கழிக்கப்படாத நிா்வாகத்தை உருவாக்க அதிகாரிகள் செயல்பட வேண்டும். திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண, அலுவலா்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சிறந்த வளா்ச்சி சாத்தியமாகும் என்றாா்.
கூட்டத்தில் திட்டக்குடி வட்டாட்சியா் உதயகுமாா், வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், மங்களூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முகசிகாமணி, முருகன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.