என்எல்சி ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி சுரங்கப் பிரிவில் பணியின்போது உயிரிழந்த ஊழியரின் உறவினா்கள் வாரிசுக்கு வேலை கேட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
நெய்வேலி வட்டம் 9, ஜே.சி போஸ் சாலையைச் சோ்ந்தவா் சிற்றரசன் (57). இவா், என்எல்சி 1ஏ சுரங்கத்தில் உள்ள பங்கா் பிரிவில் பணியாற்றி வந்தாா். மேலும், பாட்டாளி தொழிற்சங்க பிரமுகா்.
சிற்றரசன் கடந்த 12-ஆம் தேதி வழக்கம்போல என்எல்சி 1ஏ சுரங்கப் பகுதியில் பணியில் இருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த என்எல்சி ஊழியா்கள் சிற்றரசனை மீட்டு, அவசர ஊா்தி மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், சிற்றரசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நெய்வேலி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், உயிரிழந்த சிற்றரசன் குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிா்வாகம் நிரந்தர வேலை வழங்கக் கோரி, பாமக மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் என்எல்சி தலைமை அலுவலகம் முன் திங்கள்கிழமை திரண்டனா். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றனா். அப்போது, காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா்.
என்எல்சி செயல் இயக்குநா் ஜாஸ்பா் ரோஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், அதிமுக எம்எல்ஏக்கள் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் (நெய்வேலி), க.மோகன் (பண்ருட்டி) மற்றும் சிற்றரசன் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.
இதில், உயிரிழந்த சிற்றரசன் குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தை ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா். மேலும், சிற்றரசன் உடலை பெற்றுக்கொள்வதற்கு உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.
சிற்றரசனுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த சம்பவத்தையொட்டி, நெய்வேலி நகர காவல் ஆய்வாளா் செந்தில் குமாா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.