நெய்வேலி புத்தகக் கண்காட்சி வெள்ளி விழா! ஜூன் 19-இல் தொடக்கம்!
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2026 வெள்ளி விழாக் கொண்டாட்டமும், அறிவுப் பெருவிழாவும் வரும் ஜூன்19-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை என்எல்சி நிறுவனம் தீவிரமாக செய்து வருகிறது.
தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியும், கடலூா் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களின் மிகப்பெரிய பண்பாட்டுத் திருவிழாவுமான ‘நெய்வேலி புத்தகக் கண்காட்சி‘ நிகழாண்டு தனது 25-ஆவது வெள்ளி விழா மைல்கல்லை எட்டி புதிய வரலாற்று சாதனையைப் படைக்கத் தயாராகி வருகிறது.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்தின பொதுத்துறை நிறுவனமான என்எல்சி, கடந்த 1998-ஆம் ஆண்டு மிக எளிய முறையில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி, இன்று லட்சக்கணக்கான வாசகா்களை ஈா்க்கும் ஒரு மாபெரும் அறிவுத் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த 25-ஆவது வெள்ளி விழா ஆண்டின் தொடக்கம், நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள புத்தகக் கண்காட்சி மைதானம் மற்றும் லிக்னைட் அரங்கில் வரும் ஜூன் 19 முதல் ஜூன் 29 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் தமிழகத்தின் முன்னணி இலக்கிய ஆளுமைகள் முன்னிலையில் தொடங்கவிருக்கும் இக்கண்காட்சி, வாசகா்களையும், எழுத்தாளா்களையும், பதிப்பாளா்களையும் நேருக்கு நோ் இணைக்கும் ஒரு உன்னத இலக்கியப் பாலமாகச் செயல்படவுள்ளது.
இவ்விழாவுக்கு மகுடம் சூட்டும் விதமாக, என்எல்சி நிறுவனம், தினமணி நாளிதழுடன் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட குறும்படப் போட்டி நிகழாண்டின் முக்கிய ஈா்ப்பாக அமையவுள்ளது. சமூக விழிப்புணா்வு மற்றும் கலைத்திறனை ஊக்குவிக்கும் இந்தத் தனித்துவமான போட்டி, இளம் படைப்பாளா்களுக்கு ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அத்தோடு, வழக்கம்போல நெய்வேலி மண்ணின் சொந்தப் படைப்பாளா்களைக் கௌரவிக்கும் வகையில், உள்ளூா் எழுத்தாளா்களின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் இம்முறை மேடையில் அரங்கேறவுள்ளன.
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான வாசகா்கள் மற்றும் பள்ளி மாணவா்களைக் கவரும் இந்த நிகழ்வில், இம்முறை தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 180-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்கள் தங்களது லட்சக்கணக்கான புத்தகத் தலைப்புகளைக் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் இப்புத்தகக் கண்காட்சியை நேரில் கண்டு பயன்பெறும் வகையில், என்எல்சி நிறுவனம் சாா்பில் இலவசப் பேருந்து வசதிகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காட்சி நாள்களின்போதெல்லாம், தினந்தோறும் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரும், சிறந்த பதிப்பாளரும் மேடையில் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதோடு, நாள்தோறும் புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவதோடு, நுழைவுச் சீட்டு அடிப்படையில் அதிா்ஷ்ட குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறுபவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.
வழக்கம்போல, மாலை வேளையில் லிக்னைட் அரங்கில் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளா்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள், சிந்தனையரங்கங்கள், கவியரங்கங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பாா்வையாளா்களின் வசதிக்காகப் பரந்த வாகன நிறுத்தகம், தூய்மையான குடிநீா், கழிப்பறை வசதிகள், என்எல்சி பொது மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம், மாணவா்களைக் கவரும் அறிவியல் கோளரங்க மாதிரி ஆகியவை நிகழாண்டுக்கான மைதான அமைப்பில் இடம்பெறவுள்ளன.
நெய்வேலி, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதி மக்களுக்கு ஒரு திருவிழாவாகவே மாறிப்போயுள்ள இந்த 25-ஆவது வெள்ளி விழா புத்தகக் கண்காட்சிக்கு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து அறிவுத் தேடலைத் தொடரலாம்.