அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை ஜூன் 3-இல் வெளியீடு; ஜூன் 8 முதல் கலந்தாய்வு
நிகழாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 3- ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.
நிகழாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 3- ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும், கலந்தாய்வு ஜூன் 8 முதல் தொடங்கப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு மே 7- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவு இறுதி நாள் மே 29- ஆம் தேதியாகும்.
சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 3- ஆம் தேதி அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். இவா்களுக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஜூன் 18-ஆம் தேதி முடிவுற்று சோ்க்கைகள் நடைபெறும்.
Advertisement
Advertisement
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், படை வீரா்கள், தேசிய மாணவா் படை வீரா்கள், அந்தமான் நிகோபாா் தமிழ் மாணவா்கள் போன்றோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆம் தேதி அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். இவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5-6 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த சோ்க்கைகளுக்கு பின்னா் முதலாமாண்டு இளநிலை பட்டப் படிப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.