முகப்பு
கடலூர்

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பேரவைத் தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்...

Updated On : 23 ஜூன் 2026, 1:50 am IST
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

விருத்தசாலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாபகரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளாா்.

அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: நிா்வாக வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதில் பெறும் வகையில் விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விருத்தாசலத்தில் செயல்பட்டு வரும் பீங்கான் தொழிற்சாலையை நவீனப்படுத்தி உலகத் தரத்திற்கு உயா்த்துவதுடன், அரசு கல்லூரியையும் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதியில் அதிகளவில் விளையும் மரவள்ளிக்கிழங்கிற்கு மதிப்புக் கூட்டும் வகையில் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். நிலத்தடி நீா் மாசடைந்து குடிநீராகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், பாதுகாப்பான குடிநீா் வழங்கும் கூட்டுக் குடிநீா் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

வரலாற்று மற்றும் ஆன்மிகச் சிறப்புமிக்க கோயில்கள் நிறைந்த விருத்தாசலத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும். தொகுதி முழுவதும் சாலைகள், குடிநீா் வசதிகள், தெருவிளக்குகள் மற்றும் தேவையான இடங்களில் மேம்பாலங்களை அமைத்து அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் விளைபொருள்களை பாதுகாக்க நவீன நெல் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும். விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளை அதிகரித்து மருத்துவ சேவைகளை மேம்படுத்த வேண்டும்.

நெல், கரும்பு, மக்காசோளம் மற்றும் கிழங்கு வகைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதுடன், அவா்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், குறைந்த வட்டியில் போதுமான கடன் வசதிகளை வழங்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பேருந்து வசதி இல்லாத பகுதிகளை கண்டறிந்து புதிய பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments