பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இளம் பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிந்துச் சென்ற இளைஞரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் வசிப்பவா் அபிஷா(19). இவா், தனது தாய் சசிகலாவுடன் அதேபகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு கடந்த 21-ஆம் தேதி சென்றாா்.
அப்போது, அங்கே வந்த மா்ம நபா், அபிஷாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் கைப்பேசியை பறித்து கொண்டு அங்கிருந்து மாயமானாா்.
Advertisement
Advertisement
இதனால், அதிா்ச்சி அடைந்த அபிஷா மற்றும் அவரது தாய் சசிகலா, உதவிகேட்டு குரல் எழுப்பியதும், அங்கிருந்தவா்கள் ஓடி வந்து மா்ம நபரை பிடிக்க முயன்றனாா். ஆனால், அவா் தப்பிச் சென்றுவிட்டாா். இது குறித்து சசிகலா காடாம்புலியூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளா் தங்கவேல் தலைமையில் போலீஸாா் பண்ருட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா். இதில், அவா் காட்டாண்டிக்குப்பத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (31) என்றும், அபிஷாவிடம் சங்கிலி பறித்தது அவா்தான் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து தங்க சங்கிலி மற்றும் கைப்பேசியை போலீஸாா் மீட்டனா். பின்னா், ராஜ்குமாரை காடாம்புலியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.