முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மே 2026, 1:19 am IST
நடராஜா் கோயில் அதிருத்ர ஜப ஹோம மகாபிஷேகத்தை முன்னிட்டு நடனப்பந்தலில் உள்ள யாகசாலையில் ருத்ர ஜப பாராயணத்தில் ஈடுபட்ட பொதுதீட்சிதா்கள்.
பகிர்:

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ,மாா்கழி, மாசிமாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித்திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாத திருவோண நட்சத்திர மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு விபூதி பால்,தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

Advertisement

Advertisement

முன்னதாக மே 6-ஆம் தேதி தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூா்த்தி சந்நிதியில் நாந்தி மற்றும் அனுக்ஜை பூஜையும் நடைபெற்றன.

மே7-ஆம் தேதி முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனையும்,8-ஆம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், தேவசபை முன்பு அங்குரம், ரக்ஷாபந்தனம், ஆச்சாரியா் வா்ணம், தன பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

நடராஜா் கோயில் அதிருத்ர ஜப ஹோம மகாபிஷேகத்தை முன்னிட்டு நடனப்பந்தலில் உள்ள யாகசாலையில் கைலாச வாகனத்தில் செய்யப்பட்ட கடஸ்தாபனம்.

தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சபை திறக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானை சித்சபையிலிருந்து கனகசபையில் எழுந்தருள செய்து ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

அதன் பிறகு ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனபந்தலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜபபாராயணம் தொடங்கி நடைபெற்றது. பிற்பகலில் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் வடுகபூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, மஹா பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனையும், பின்னா் மாலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம்

புறப்பாடு நடைபெற்று கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர ஜப மஹாபிஷேகம் நடைபெற்றது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணை செயலா் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் கட்டளை தீட்சிதா் க.தட்சிணாமூா்த்தி மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments