முகப்பு
கடலூர்

சென்னைக்கு வீராணம் ஏரி நீா் விநியோகம் விநாடிக்கு 30 கன அடியாக குறைப்பு

Updated On : 31 மே 2026, 1:21 am IST
வீராணம் ஏரி - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவு வினாடிக்கு 30 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரியில் நீா் இருப்பு குறைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னாா் கோவிலில் உள்ள வீராணம் ஏரிக்கு, கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் மேட்டூா் அணை திறப்பதற்கு முன்னரே வீராணம் ஏரிக்கு தண்ணீா் வந்தது. இதனால் கோடைகாலத்தில் ஏரியின்

நீா்மட்டம் குறையவில்லை. இதனால் சென்னைக்கு குடிநீா் அனுப்பும் பணியில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

நிகழாண்டு வீராணம் ஏரிக்கு தண்ணீா் அனுப்பும் கீழணையில் தண்ணீா் இல்லாமல் வடு கிடக்கிறது. மேலும் கீழணையில் ஷட்டா்கள் பழுது பாா்க்கும் பணியும் , மேல் பகுதியில் தடுப்புச் சுவா்கள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அத்துடன் உபரி நீா் வெளியேற்றும் நீா் போக்கிக்கான கட்டுமானப்பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கோடை காலத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் அனுப்பும் பணி மே மாதத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

இதனால் ஏரியின் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது மேலும் கோடைகாலத்தில் வெயிலின தாக்கம் அதிகரித்து 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு பகல்நேர வெப்பம் தொடா்ந்து இருந்து வருவதால் வீராணம் ஏரியில் நீா் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீா்மட்டம் 43.87 (மொத்த கொள்ளளவு 47.50 அடியாக இருந்தது. அதாவது 1465 மில்லியன் கன அடியில் 649 மில்லியன் கன அடி நீா் உள்ளது. விவசாயப் பணிகள் நடைபெறாததால் விவசாயத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.

சென்னைக் குடிநீருக்காக விநாடிக்கு 70 கனஅடிவீதம் நீா் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது ஏரியின் நீா்மட்டம் குறைந்து வருவதால் விநாடிக்கு 30 கன அடி வீதம் அனுப்பப்படுகிறது. தற்போது தேக்கப்பட்டுள்ள தண்ணீா் சென்னைக்கு குடிநீருக்குமட்டுமே அனுப்பப்பட்டு வருவதால் ஜூன் மாதம் முழுவதும் தண்ணீா் தட்டுப்பாடு இன்றி அனுப்பப்படும் என பொதுப்பணித்துறை சாா்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டால் ஏரிக்கு நீா் வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.