முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

Updated On : 17 மே 2026, 4:08 am IST
பகிர்:

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும். இங்கு மக்கள் இயற்கையோடு இணைந்து அமைதியை அனுபவிக்க ஏராளமான பூங்காக்களும், சுற்றுலாத் தலங்களும் நிறைய உள்ளன.

புதிய இடங்களைப் பார்க்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் பல சுற்றுச்சூழலியல் பூங்காக்களையும், இயற்கையுடன் கூடிய சுற்றுலாத் தலங்களையும் உருவாக்கியுள்ளனர். அத்தகைய சுற்றுலாத் தலங்களில் அண்மையில் உருவாக்கப்பட்ட மணலி கடப்பாக்கம் ஏரி சுற்றுச்சூழல் பூங்கா மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுற்றிலும் வயல்வெளிகள், பச்சை நிறத்தைப் பரப்பிவிட்டவாறு நெல், வாழை விவசாய நிலங்கள் எனப் பல நூறு ஏக்கருக்கு செழித்திருந்தது சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 -ஆவது வார்டு பகுதியிலுள்ள கன்னியம்மன்பேட்டை. விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில் சுமார் 149 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கடப்பாக்கம் ஏரி.

Advertisement

சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த விச்சூர், காமராஜர்புரம், கன்னியம்மன்பேட்டை, கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பெய்யும் மழைநீர் சிறிய ஓடைகள் மூலம் ஓரிடத்தில் சேர்ந்து கடப்பாக்கம் ஏரியானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அந்த ஏரி நீர்ப் பாசனத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவுக்கு விவசாயம் நடைபெற்றது. நகர நாகரிகம் கடப்பாக்கம் ஏரியைச் சுற்றிலும் கட்டடங்களாக மாறிட, ஏரிநீர் விவசாயப் பயன்பாட்டின் அளவு குறைந்தது. இதனால் அந்தப் பகுதி குடியிருப்புகளுக்கு மத்தியில் நிலத்தடி நீர் ஆதாரமாகியது.

இந்த ஏரியின் மேற்பகுதியில் செம்பியம் ஏரி உள்ளது. அதில் தேங்கும் மழைநீரானது இயற்கையிலேயே கடப்பாக்கம் ஏரிக்கு வரும் வகையில் இயற்கை வழி கால்வாய் அமைந்துள்ளது. கடப்பாக்கம் ஏரி நிரம்பியதும், இயற்கையாகவே அதன் கீழ்ப்பகுதியில் உள்ள மணலி அரியலூர் ஏரிக்குத் தண்ணீர் தானாகவே செல்லும்.

இப்படியாக இயற்கையாக அமைந்த இந்த ஏரியின் சுற்றுப்புறமானது, ஒருபுறம் வீடுகள் அதிகரிப்பும், மறுபுறம் விவசாய நிலங்கள் குறைப்பும் என எதிர்காலத்தில் ஏரி ஆக்கிரமிப்புக்கான இடமாகிவிடக்கூடாது என சென்னை மாநகராட்சி பொறியியல் துறையினர் அச்சமடைந்தனர். எனவே, ஏரியை அழுகுபடுத்தி காலத்துக்கேற்ப சுற்றுச்சூழலை அதில் ஏற்படுத்த சிறப்புத் திட்டம் தீட்டப்பட்டது.

ஏரிக்கரையை அழகுபடுத்தவும், ஏரியின் நடுவில் தனித்தீவுத் திடலை உருவாக்கி, பறவைகள் சரணாலயத்தை ஏற்படுத்தவும், ரூ.58 கோடியில் 2024-இல் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. கொசஸ்தலை ஆற்று வடிநிலத் திட்டத்தில், தற்போது அந்த ஏரி காண்போர் வியக்கும் வகையிலான இயற்கையுடன் இணைந்த செயற்கை சுற்றுலாத் தலமாக்கியுள்ளனர்.

ஏரிக்கரையானது 5 மீ. அளவுக்கு அகலப்படுத்தப்பட்டும், 5.5 மீட்டருக்கு கரை உயர்த்தப்பட்டும் உள்ளன. அதனால் இதுவரை 110 கோடி லிட்டர் தண்ணீர் தேங்கிய நிலையில், தற்போது 190 கோடி லிட்டர் தண்ணீர் ஏரியில் தேக்கப்பட்டுள்ளதால் குறுங்கடல்போல காட்சியளிக்கிறது.

சுமார் 3 கி.மீ. சுற்றளவு செயற்கைச் சுற்றுலாத் தலமான கடப்பாக்கம் ஏரியில் வேம்பு, புங்கை மரம், மந்தாரை உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் மரங்களும், தாவரங்களும் 68 ஆயிரம் எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளன. மூலிகைத் தாவரங்களான வெட்டிவேர் உள்ளிட்டவையும் நடப்பட்டுள்ளன. பசும்புல் தரைகள் அழகாக அமைந்துள்ளன. அங்கிருந்து ஏரியைப் பார்த்தால் ஏதோ வெளிநாட்டில் இருப்பது போன்ற எண்ணமே ஏற்படுகிறது.

ஏரியின் முன்பகுதியில் செயற்கைப் புல்வெளிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தும் மேடைகள், சிறார்களுக்கான நவீன விளையாட்டுச் சாதனங்களுடனான பூங்காக்கள், பெரியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுத் தளம், நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஏரிக்கு நடுவே பறவைகள் தங்கிச்செல்வதற்கான தனித்தீவும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீவில் மரங்கள், புதர்கள் உள்ளன. ஏரிக்கரையிலிருந்து தீவுக்கு படகு சவாரியும் விரைவில் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.