முகப்பு
கடலூர்

தவறான சிகிச்சையால் 6 மாத சிசு உயிரிழந்ததாக பெண் புகாா்

Updated On : 31 மே 2026, 1:31 am IST
சிசு - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் தவறான சிகிச்சையால் 6 மாத சிசு உயிரிழந்ததாக பெண் ஒருவா் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

கடலூா் அருகே சுப்ரமணியபுரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி சந்தியா (29). திருமணமாகி இரண்டு ஆண்டுகளான இவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை கரு கலைந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக கா்ப்பமான சந்தியா, சொந்த ஊரில் தாய் வீட்டில் தங்கி, தொண்டமாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்நிலையில், கடந்த மே 16-ஆம் தேதி ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக சந்தியா கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயிற்றில் இருந்த 6 மாத சிசு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மருத்துவமனையில் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாலேயே சிசு உயிரிழந்ததாக சந்தியா குற்றம்சாட்டி, சுகாதாரத்துறை நலப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்துள்ளாா்.

அந்த மனுவில், வயிற்று வலிக்காக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென சிசு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதற்கான காரணம் குறித்து கேட்டபோதும் உரிய விளக்கம் அளிக்கவில்லை. தவறான சிகிச்சையால் எனது சிசு உயிரிழந்தது.எனவே சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த புகாரைப் பெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.