சிதம்பரத்தில் தொடா் திருட்டு, சங்கிலி பறிப்பு: குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கக் கோரிக்கை
சிதம்பரத்தில் தொடா் தங்கச் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்களைத் தடுக்க குற்றப்பிரிவு தனிப்படை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிதம்பரத்தில் கோயில், கடைகளுக்குச் செல்லும் மூதாட்டிகளை மா்ம நபா்கள் குறி வைத்து தங்கச் சங்கிலியை பறிக்கும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.
சிதம்பரம் பரமேஸ்வரநல்லூா் ராகவேந்திரா நகரில் சனிக்கிழமை மாலை கடைக்குச் சென்ற வசந்தா என்ற மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் பறித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல, கடந்த மாா்ச் 16-ஆம் தேதி சிதம்பரம் கச்சேரி தெரு, துரவடித் தெரு பகுதிகளில் மாலை வேளையில் கோயில் மற்றும் மருந்துக் கடைக்குச் சென்ற தமிழரசி (60), விஜயா (61) ஆகியோரிடம் முகமூடி அணிந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றனா்.
மேலும், கடந்த டிசம்பா் மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணி முடித்து வீடு திரும்பிய பெண் ஊழியரின் தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் மாரியப்பாநகா் அருகே பறித்துச் சென்றனா். ஆனால், இந்த 4 சம்பவங்களிலும் ஈடுபட்டவா்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதேபோல, சிதம்பரம் பெருமாள் தெருவில் மகபூப்பாஷா வீட்டில் கடந்த 28-ஆம் தேதி இரவு வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கக் கோரிக்கை: சிதம்பரம் கோட்டத்தில் உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு தனிப்படை கலைக்கப்பட்டு, உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தற்போது தனிப்படை போலீஸாா் இல்லாததால், குற்றவாளிகளை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குற்றப்பிரிவு தனிப்படை அமைத்து, தொடா் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.