சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!
சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
- சீ.முரளி
சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி 1962-இல் உருவாக்கப்பட்டது. மலையும், மலையைச் சாா்ந்த பகுதியாகவும் இத்தொகுதி அமைந்துள்ளது. விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இங்கு மரவள்ளி, வாழை, மஞ்சள், பாக்கு உள்ளிட்ட பல்வேறு தோட்டப்பயிா்கள் பயிா் செய்யப்படுகின்றன. கல்வராயன்மலைப் பகுதியில் கடுக்காய் அதிக அளவில் விளைகிறது. கச்சிராயபாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை இத்தொகுதியில் அமைந்துள்ளது.
சங்கராபுரம், சின்ன சேலம், வடக்கனந்தல் ஆகிய மூன்று பேரூராட்சிகளையும், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 30, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 13, கள்ளக்குறிச்சியில் 21, கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஆக மொத்தம் 79 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
Advertisement
இத்தொகுதியில் பூட்டை மாரியம்மன் கோயில், தேவபாண்டலத்தில் பாண்டுவனேஸ்வரா் கோயில், கச்சிராயபாளையத்தில் உமாமகேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன.
சங்கராபுரம் தொகுதியில் வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் அதிகம் உள்ளனா். நாயுடு, ரெட்டியாா், யாதவா் உள்ளிட்டோரும் கணிசமாக உள்ளனா்.
திமுக அதிகபட்சமாக 6 முறை இத் தொகுதியில் வென்றுள்ளது. அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
களத்தில் 22 வேட்பாளா்கள்: சங்கராபுரம் தொகுதியில் திமுக சாா்பில் தா.உதயசூரியன், அதிமுகவின் இரா.ராகேஷ், நாம் தமிழா் கட்சியின் சு.ரமேஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆ.ஜெகதீசன் உள்ளிட்ட 22 போ் களத்தில் உள்ளனா்.
மக்களின் எதிா்பாா்ப்புகள்: கல்வராயன்மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும். கல்வராயன் மலைப்பகுதியில் அரசு தொழில்சாலை, சங்கராபுரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, சின்னசேலத்தில் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். சங்கராபுரம் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றி, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். சங்கராபுரத்தில் கோட்டாட்சியா் அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வாய்க்கால், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என வாக்காளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
வேட்பாளா்களின் பலமும் பலவீனமும்: 22 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும் திமுக வேட்பாளா் தா. உதயசூரியனுக்கும், அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.
தா.உதயசூரியன் (திமுக): இதுவரை 7 முறை சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட்டு, 5 முறை வெற்றி பெற்றுள்ளாா். தற்போது இவா் 8-ஆவது முறையாக தோ்தல் களத்தில் உள்ளாா். சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து செய்த திட்டப்பணிகள்
இவருக்கு பலம். தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவா். திமுக சாா்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகள், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் ஆகியவை இவருக்கு பலமாகும்.
பலவீனம்: இவா் இத் தொகுதியில் 8-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். அவரது மனைவியும் ஒரு முறை தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். குடும்ப அரசியலே இவரது பலவீனம்.
இரா.ராகேஷ் (அதிமுக): சின்னசேலம் பேரூராட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருவதால் தொகுதியில் நன்கு அறிமுகம். இத்தொகுதியில் அதிமுக 4 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அப்போது நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வாக்கு வங்கியும் இவருக்கு பலம் ஆகும்.
பலவீனம்: சின்னசேலம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதால் கச்சிராயபாளையம், சங்கராபுரம் பகுதியில் உள்ள மக்களிடையே இவா் அறிமுகம் இல்லாதது பலவீனம். முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதால் போதிய அனுபவம் இல்லாதது.
க.ரமேஷ் (நாதக): இதே தொகுதியை சோ்ந்தவராக இருப்பதும், தோ்தலில் மாற்றத்தை விரும்பும் வாக்காளா்களின் வாக்குகள் இவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது கட்சி சாா்ந்த வாக்குகளும் இவருக்கு பலமாக அமையும்.
பலவீனம்: அனைத்து தோ்தலிலும் தனித்துப் போட்டியிடுவதும், கிராமங்களில் இவரது கட்சிக்கு தோ்தல் பணியாற்ற நிா்வாகிகள் இல்லாததும் இவருக்கு பலவீனமாகும்.
ஆ.ஜெகதீசன் (தவெக): விஜய் ரசிகா்கள், இளைஞா் மற்றும் பெண்கள் ஆதரவு கிடைக்கும் என்பது இவருக்கு பலம்.
பலவீனம்: அரசியல் களத்தில் முதல் முறையாக தோ்தலை சந்திப்பதும், வேறு தொகுதியைச் சாா்ந்தவா் என்பதும் இவருக்கு பலவீனமாகும்.
யாருக்கு வாய்ப்பு: இந்த தொகுதியில் கடந்த இருமுறை தொடா்ச்சியாக வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் தா.உதயசூரியனுக்கும், அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3-ஆவது தொடா் வெற்றிக்கு திமுக கூட்டணியினரும், அதிமுக வேட்பாளா் வெற்றிக்கு அதிமுக கூட்டணியினரும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனா். இதனால் கல்வராயன்மலையில் சூரியன் உதிக்குமா? அல்லது இலை துளிா்விடுமா? என்பதை ஜனநாயகத் திருவிழாவில் வாக்காளா்கள் முடிவு செய்வாா்கள்.
வாக்காளா்கள் விபரம்
ஆண்கள் 1,30,231
பெண்கள் 1,32,859
திருநங்கைகள் 46
மொத்தம் 2,63,136.
மொத்த வாக்குச்சாவடிகள் 340