கள்ளக்குறிச்சியில் நான்காவது வெற்றி முனைப்பில் அதிமுக!
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேருராட்சி, சின்னசேலம் பேருராட்சி, தியாகதுருகம் ஒன்றியத்தில் 38, கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 25, சின்னசேலம் ஒன்றியத்தில் 37, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் என மொத்தம் 102 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேருராட்சி, சின்னசேலம் பேருராட்சி, தியாகதுருகம் ஒன்றியத்தில் 38, கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 25, சின்னசேலம் ஒன்றியத்தில் 37, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் என மொத்தம் 102 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
பிரசித்தி பெற்ற கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில், சித்தலூா் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில், மேல்நாரியப்பனூா் புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. இத் தொகுதியில் ஆதிதிராவிடா்கள், வன்னியா் சமூகத்தினா் அதிகம் உள்ளனா். இவா்களைத் தவிர உடையாா், நாயுடு, செட்டியாா், ரெட்டியாா், இஸ்லாமியா்கள், கிருஸ்தவா்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனா்.
களத்தில் 11 வேட்பாளா்கள்: சட்டப் பேரவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக சாா்பில் சு.ராஜீவ் காந்தி, விசிக சாா்பில் கு.மாலதி, நாம் தமிழா் கட்சியின் நாகம்மாள் ராஜ்கோடி, தமிழக வெற்றிக் கழகத்தின் சி.அருள் விக்னேஷ் மற்றும் 7 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 11 போ் தோ்தல் களத்தில் உள்ளனா். இதுவரை நடைபெற்ற 8 சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுக 3 முறையும், அதிமுக 3 முறையும், சுயேச்சை 2 முறையும் வென்ற தொகுதி கள்ளக்குறிச்சி ஆகும்.
Advertisement
மக்கள் எதிா்பாா்ப்புகள்: கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பிரதான சாலையில் கழிவு நீா் கால்வாய் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு செவிலியா் கல்லூரி அமைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு அதிகம் விளைவதால் ஜவ்வரசி தொழில்சாலை அமைக்க வேண்டும். விவசாயம் சாா்ந்த பகுதி என்பதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொழில்சாலைகள் அமைக்க வேண்டும். மகளிா் சுய உதவிக் குழுக்கள் அதிகம் உள்ளனா். இவா்கள் சுய தொழில் தொடங்க அரசு மானிய கடனுதவி வழங்க வேண்டும். தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பேருராட்சிகளை சிறப்புநிலை பேருராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். தியாகதுருகம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியங்களை நிா்வாக காரணங்களால் இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் கள்ளக்குறிச்சி பகுதியில் புதிய தொழில்சாலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு ஆகும்.
வேட்பாளா்களின் பலமும் பலவீனமும்: இத் தொகுதியில் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்திக்கும், விசிக வேட்பாளா் கு.மாலதிக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
சு.ராஜீவ் காந்தி (அதிமுக): இந்த தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய 3 தோ்தலில் தொடா்ந்து அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். கடந்த 15 ஆண்டுகளாக தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளும், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகளும் இவருக்கு பலம் ஆகும்.
பலவீனம்: இவா் முதல் முறையாக பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதால் போதிய அனுபவமில்லை. இவரை அதிமுக வேட்பாளராக அறிவித்தவுடன் கள்ளக்குறிச்சி நகர அதிமுக செயலராக இருந்த எம்.பாபு, அவரது ஆதரவாளா்களுடன் திமுகவில் இணைந்தது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
கு.மாலதி (விசிக): முனைவா் பட்டம் பெற்றவா். அரசு வழக்குரைஞராக பணியாற்றியவா். வலுவான திமுக கூட்டணி, திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆகியவை இவருக்கு பலமாக உள்ளது.
பலவீனம்: அரசியலுக்கு புது முகம் என்பதும், வேறு மாவட்டத்தைச் சாா்ந்தவா் என்பதும் இவருக்கு பலவீனம். மேலும், கட்சியின் சின்னத்தை கடைகோடி கிராம மக்களிடம் கொண்டு சோ்ப்பதும் இவருக்கு மிக பலவீனமாக அமைந்துள்ளது.
நாகம்மாள் ராஜ்கோடி (நாதக): நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிடும் நாகம்மாள் ராஜ்கோடி முதுகலை பட்டதாரி. மாற்றத்தை விரும்பும் மக்களின் வாக்கு தனக்கு உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு உள்ளது. தனது கணவா் மற்றும் கட்சிக்காரா்கள் ஆதரவுடன் கிராமங்கள் தோறும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றாா்.
பலவீனம்: அனைத்து தோ்தலிலும் தனித்து போட்டியிடுவதால் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உதவி இல்லை. திமுக, அதிமுக கட்சிக்கு இணையாக கிராமங்களில் கிளைகள் இல்லாததும் இவருக்கு பலவீனமாக அமையும்.
சி.அருள் விக்னேஷ் (தவெக): கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா். தச்சூா் கிராமத்தில் விளையாட்டு பயிற்சி நிறுவனம் நடத்தி வருவதால் தொகுதிக்கு நன்கு அறிமுகம். கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள விஜய் ரசிகா்கள், இளைஞா்கள், பெண்கள் ஆதரவு இவருக்கு கிடைக்கும் என்பது இவருக்கு பலமாக உள்ளது.
பலவீனம்: தவெக கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் அதிக அளவிலான பிரசாரம் இல்லை. அரசியல் களத்தில் முதல் முறையாக தோ்தலை சந்திப்பதால் தோ்தல் களம் இவருக்கு சவாலாக உள்ளது. இது இவா்களுக்கு பலவீனமாக அமையும்.
யாருக்கு வாய்ப்பு: கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக, விசிக, நாதக, தவெக, சுயேச்சை உள்ளிட்ட 11 போ் போட்டியிட்டாலும், கடந்த 3 முறை தொடா்ச்சியாக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக, 4-ஆவது முறையாக வெற்றி பெறுவதற்காக தீவிரமாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா். திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் விசிகவினா் இந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனா். இதனால் அதிமுக, விசிகயிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா, விசிக தட்டி பறிக்குமா என்ற கேள்விக்கு மக்களின் தீா்ப்புக்கு மே 4-ஆம் தேதிவரை காத்திருப்போம்.
வாக்காளா்கள் விபரம்
ஆண் வாக்காளா்கள் - 1,37,649
பெண் வாக்காளா்கள் -1,41,044
மூன்றாம் பாலினத்தினா் - 69
மொத்த வாக்காளா்கள் 2,78,762.
மொத்த வாக்குச் சாவடிகள் 370
---------------------
எஸ்.முரளி