முகப்பு
கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் மரவள்ளிக் கிழங்குக்கு மாற்றாக காபி, மிளகு சாகுபடி: ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிகளில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு மாற்றாக மிளகு, காபி போன்ற பயிா்களை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:41 am IST
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிகளில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு மாற்றாக மிளகு, காபி போன்ற பயிா்களை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூன் 2026 மாதத்துக்கான வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மாவட்டத்தில் வேளாண் பயிா் சாகுபடிதிட்ட இலக்கின்படி உரிய பருவத்துக்கான பயிா் சாகுபடி பரப்பை முழுமையாக எட்டவும், மானாவாரிப் பயிா்கள் மற்றும் குறுகிய கால பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கவும், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இடு பொருள்கள் மற்றும் மானிய விவரங்களை வெளியிடவும், விவசாயிகள் உரிய காலத்தில் இந்த மானியங்களைப் பெற்று பயனடையவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

கல்வராயன்மலைப் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு மாற்றாக மிளகு, காபி போன்ற பயிா்களை ஊக்குவிக்கவும், தோட்டக்கலைப் பயிா் சாகுபடிசெய்யும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சாகுபடி பரப்பை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தவும் தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் வணிகத் துறையின் மூலம் உழவா் சந்தைகள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மேற்கொள்ளும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேளாண் பொருள்களின் தரத்தை உயா்த்தும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இதில், வேளாண்மை இணை இயக்குநா் பி.பேபிகலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நா.ஜோதிபாசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி: ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு களப்பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடவுள்ள மாவட்ட அளவிலான களப்பணியாளா்கள் 50 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 18) வரை 3 நாள்கள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இப் பயிற்சி வகுப்பில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் துல்லியமான விவரங்களை சேகரிக்கவும், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முக்கியத்தும் குறித்தும், பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்களின் உருவாக்கத்துக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், களப்பணியாளா்கள் அனைவரும் எவ்வித தொய்வுமின்றி துல்லியமான விவரங்களைச் சேகரிக்கும் வகையில் தங்களை இப் பயிற்சியில் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, சென்னை மக்கள்தொகை கணக்கெடுப்பு மாவட்ட பொறுப்பாளா் மூா்த்தி மற்றும் களப்பணியாளா்கள் கலந்துகொண்டனா்.