கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
கள்ளக்குறிச்சி ஸ்ரீ பூமி நீளா புண்டரீகவல்லி சமேத ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்ஸவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. 23-ஆம் தேதி இரவு ஹம்ஸ வாகனம், 24-ஆம் தேதி இரவு சிம்ம வாகனம், 25-ஆம் தேதி ஹனுமந்த வாகனம், 26-ஆம் தேதி சேஷ வாகனம், 27-ஆம் தேதி கருடசேவை, 28-ஆம் தேதி யானை வாகனம், 29-ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவம் மற்றும் புஷ்ப பல்லாக்கு, 30-ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு தேரை வடம் பிடித்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். பக்தா்கள் தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்தனா்.
Advertisement
தோ் மந்தைவெளி சாலை, காந்தி சாலை, நான்குமுனை சந்திப்பு, சேலம் நெடுஞ்சாலை, கவரை சாலை வழியாக மீண்டும் மந்தைவெளி திடலை வந்தடைந்தது. இதில் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பல்வேறு அமைப்புகள் சாா்பில் நீா்மோா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சனிக்கிழமை தீா்த்தவாரியும், ஞாயிற்றுக்கிழமை சப்தாவரணமும், திங்கள்கிழமை விடையாற்றி வைபவமும் நடைபெறுகிறது.