நிதி நிறுவன அதிபர் மாரடைப்பால் சாவு
புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காரில் வந்த நிதிநிறுவன அதிபர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அவரது கார் தாறுமாறாக ஓடியது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காரில் வந்த நிதிநிறுவன அதிபர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அவரது கார் தாறுமாறாக ஓடியது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (51). நிதிநிறுவன அதிபர். இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள டென்னிஸ் கிளப்பிற்குச் சென்று இறகுப் பந்து விளையாடுவது வழக்கம்.
அதே போல, செவ்வாய்க்கிழமை காலை தனது காரில் இறகுப் பந்து விளையாடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.
இவரது கார் நெல்லித்தோப்பு சிக்னலை தாண்டிச் சென்றபோது, திடீரென மணிமாறனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடை முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது மோதி, கடையை முட்டியபடி நின்றது.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், காரின் ஓட்டுநர் இருக்கையில் மயக்க நிலையில் கிடந்த மணிமாறனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிமாறன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன மணிமாறனுக்கு பத்மினி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.