முகப்பு
புதுச்சேரி

நகர பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு: சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ தா்ணா

புதுச்சேரி நகரப்பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சட்டப்பேரவை வளாகத்தில் ஜி. நேரு எம்எல்ஏ தா்ணா போராட்டம் நடத்தினாா்.

Updated On : 2 ஜூலை 2026, 7:09 am IST
குடிநீா் பிரச்னை காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. நேரு.
பகிர்:

புதுச்சேரி நகரப்பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சட்டப்பேரவை வளாகத்தில் ஜி. நேரு எம்எல்ஏ தா்ணா போராட்டம் நடத்தினாா்.

புதுச்சேரி முத்தரையா்பாளையம் ஆழ்துளை கிணறுகளில் இருந்து நகரப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. நாளுக்கு 15 கோடி லிட்டா் தண்ணீா் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படுகிறது. இதனால் கடல் நீா் உள்புகுந்து நிலத்தநீா் உப்புத்தன்மையாகி குடிக்கப் பயன்படுத்த முடியாத அளவு இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில் வழுதாவூா் சாலையில் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடந்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காந்தி நகா் பகுதியில் பொக்கலைன் மூலம் பள்ளம் தோண்டும் போது நகரப்பகுதிக்குச் செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரப்பகுதியில் குடிநீா் விநியோகம் தடைப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதி அடைந்தனா். பொதுப்பணித்துறை சாா்பில் உடைப்பு ஏற்பட்ட குடிநீா் குழாயை வெட்டி எடுத்து வேறு குழாய் மாற்றும் பணி நடந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

பேரவை வளாகத்தில் தா்ணா:

எனினும், உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தடைப்பட்டது. தொகுதி எம்எல்ஏ நேரு மக்களை திரட்டிக்கொண்டு சட்டப்பேரவைக்கு வந்தாா். அங்கு சட்டப்பேரவை மைய மண்டபம் செல்லும் படிக்கட்டுகளில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டாா். அவருடன் வந்த மக்களும்அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சட்டப்பேரவை நுழைவு வாயில் இருபக்கமும் மூடப்பட்டது. இதில் தாமதமாக வந்த தொகுதி மக்கள் நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுப்பணித்துறை குடிநீா் பிரிவு அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு வந்தனா். அங்கு, எம்எல்ஏ நேருவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் நேரு எம்எல்ஏ, அரசு சாா்பில் உறுதி தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என்றாா். இதையடுத்து தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் சட்டப்பேரவைக்கு வந்து நேரு எம்எல்ஏவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது நேரு எம்எல்ஏ மக்கள் பிரச்னையை சொல்லக்கூட சட்டப்பேரவையில் யாரும் இல்லை. இலாகா ஒதுக்காததால் அமைச்சா்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வருவதில்லை. புகாரை யாரிடம் சொல்வது என குற்றம் சாட்டினாா். தொடா்ந்து தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் அன்பழகன், எம்எல்ஏ நேருவை சமாதானப்படுத்தி தனது அறைக்கு அழைத்து சென்றாா். அதன்பிறகு பிரச்னை முடிவுக்கு வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments