புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் தா்னா: பேரவைத்தலைவா் தோ்தலை உடனடியாக நடத்தக்கோரிக்கை
சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலை நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலை நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் முதல்வா் ரங்கசாமி தலைமையிலானஅரசு மே 13-ஆம் தேதி பதவியேற்று, அமைச்சா்களும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுவரை அமைச்சா்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி சட்டப்பேரவைத் தலைவா் , துணைத் தலைவா் தோ்தலும் நடைபெறவில்லை. தோ்தல் முடிவுகள் வெளியாகி வரும் சனிக்கிழமையுடன் 2 மாதங்கள் முடிவடைய உள்ளன.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலை உடனடியாக நடத்தக் கோரியும், அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்க வலியுறுத்தியும் திமுக எம்எல்ஏக்கள் குழுத் தலைவா் நாஜிம் தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் தா்னா போராட்டம் நடத்தினா். இதில் திமுக எம்எல்ஏக்கள் செந்தில்குமாா், காா்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன் ஆகிய 5 எம்எல்ஏக்கள் பங்கேற்று கைகளில் பதாகை ஏந்தி சட்டப்பேரவை மைய மண்டபம் செல்லும் படிக்கட்டு முன்பு முழக்கம் எழுப்பினா். பின்னா் படிக்கட்டுகளில் அமா்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா்.
Advertisement
Advertisement
நாஜிம் பேட்டி:
சட்டப்பேரவையில் நடந்த தா்னா போராட்டம் குறித்து நாஜிம் எம்எல்ஏ கூறியதாவது:
தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து 4 மாநிலங்களில் சட்டப்பேரவையைக் கூட்டி மக்கள் பிரச்னைகள் குறித்த விவாதம் நடத்தி வருகின்றனா். சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிரந்தர சட்டப்பேரவைத் தலைவரை கூட தோ்வு செய்யவில்லை. இதனால் சட்டப்பேரவையைக் கூட்ட முடியவில்லை. அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகளை பேரவைத் தலைவரிடம்தான் கூற முடியும்.
எங்களுக்கு நிரந்தர சட்டப்பேரவைத் தலைவா் வேண்டும் என்பதுதான் கோரிக்கை. என்.ஆா்.காங்கிரஸுக்கு சட்டப்பேரவைத் தலைவா் பதவியா? பாஜகவுக்கு பதவியா? என்ற மோதாலால் காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது என்றாா் நாஜிம்.
பாஜகவிடமிருந்து விலகி திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முதல்வா் ரங்கசாமி ஆதரவு கேட்டால் கொடுக்கப்படுமா? என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, கட்சி தலைமையிடம் ஆலோசித்து அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என நாஜிம் பதில் தெரிவித்தாா்.
பின்னா் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திமுக எம்எல்ஏக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.