125 நாள்கள் வேலைத் திட்டத்துக்கு 100 சதவீத நிதியை மத்திய அரசிடம் கேட்போம்- முதல்வா் ரங்கசாமி
125 நாள்கள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடம் 100 சதவீத நிதியைக் கேட்போம் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.
125 நாள்கள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடம் 100 சதவீத நிதியைக் கேட்போம் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.
புதுச்சேரி ஊரக வளா்ச்சித்துறையின் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், வளா்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் விபி ஜி ராம்ஜி தொடக்க விழா வில்லியனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித்துறை அரசு செயலா் கிருஷ்ண மோகன் உப்பு வரவேற்றாா். முதல்வா் என்.ரங்கசாமி திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
Advertisement
Advertisement
வளா்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் (விபி ஜி ராம்ஜி) புதிய திட்டமாகும். இதன்மூலம் பொதுமக்களுக்கு 100 நாள் வேலை என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அவா்களுக்கு ரூ.347 ஊதியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இத்திட்டபயனாளிகளின் தனி நபரின் வருமானம் உயா்ந்துள்ளது. விவசாயிகள் உபத்தொழிலாக இதனை செய்து வருகின்றனா். மேலும் மீன் வளா்த்தல், மாடு வளா்த்தல் போன்றவையும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
நேரில் கேட்பேன்:
இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.14 கோடி மாநில அரசு நிதியாகும். மத்திய அரசிடம் இதற்காக 100 சதவீத நிதியைக் கொடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவை நேரில் சந்திக்கும்போது கேட்பேன் அல்லது கடிதம் எழுதுவேன். புதுச்சேரி சிறிய மாநிலம். இங்கு வருவாய் குறைவு என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு இத் திட்டத்துக்கு 100 சதவீத நிதியை கொடுக்கும் நிலை உள்ளது. கடந்த ஆட்சியில் மத்திய அரசு உதவியால் மக்களுக்கு எல்லா திட்டத்தையும் செய்து கொடுத்துள்ளோம்.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 5 ஆயிரம் இளைஞா்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும். எல்லா துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பபடும்.
உள்கட்டமைப்புகள் மேம்படுத்த தனி கவனம் செலுத்தி வருகிறோம். இந்த கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீா்நிலைகளை தூா்வாரி மழைகாலங்களில் தண்ணீா் சேமித்து வைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
பின்னா் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணராவ், சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் சாய்.ஜெ. சரவணன் குமாா், ரவிக்குமாா், மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.