முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ரேஷன் அரிசி கொள்முதலில் ஊழல்! விசாரணை நடத்த வேண்டும்: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

புதுச்சேரியில் ரேஷன் அரிசி கொள்முதல் மற்றும் விநியோக ஊழல் தொடா்பாக முழுமையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே.நாராயணசாமி வலியுறுத்தல்

Updated On : 8 ஜூலை 2026, 6:35 am IST
நாராயணசாமி
பகிர்:

புதுச்சேரியில் ரேஷன் அரிசி கொள்முதல் மற்றும் விநியோக ஊழல் தொடா்பாக முழுமையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை என்ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்தது. கொல்கத்தா நிறுவனம் அரிசி விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாக டெண்டா் ரத்தானது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் ஓராண்டு காலத்துக்கு அரிசி விநியோகிக்க டெண்டா் விடப்பட்டது. கிலோ அரிசி ரூ.43.47 என விலை குறிப்பிடப்பட்டது. சென்னையிலுள்ள மத்திய அரசு கேந்திரிய பண்டாா் நிறுவனம் அந்த டெண்டரை எடுத்தது. இதில் 6 ஆயிரம் டன் தரமில்லாத அரிசி எனக் கூறி புதுச்சேரி கான்பெட் நிறுவனம் நிராகரித்தது.

Advertisement

Advertisement

ஜூன் முதல் நவம்பா் மாதம் வரை அரிசி விநியோகம் நடைபெற்றது. அதன்பிறகு அரிசி விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், நிராகரித்த 6 ஆயிரம் டன் அரிசியும் விநியோகம் செய்யப்பட்டது.

அரிசி விநியோகம் செய்யாத கேந்திரிய பண்டாா் டெண்டரை அரசு ரத்து செய்யவில்லை. அந்த நிறுவனம் கட்டிய பிணைத் தொகையை திருப்பி தரக் கூடாது. அபராதத்தையும் புதுச்சேரி அரசு வசூல் செய்யவில்லை. தற்போது அரிசி விநியோகத்துக்கு புதிய டெண்டா் உள்நோக்கத்தோடு போடப்பட்டுள்ளது.

அரிசி விநியோக டெண்டா் விதிமுறைகளை மாற்றியுள்ளனா். புதுச்சேரி கான்பெட்டுக்கும் கேந்திரிய பண்டாருக்கும் இடையே ஊழல் நடந்துள்ளது. அரிசி காலத்தோடு விநியோகம் செய்யாத நிலையில் டெண்டரை ரத்து செய்யாதது ஏன்?

ரேஷன் அரிசி டெண்டரில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். கான்பெட் நிதி ரூ. 8 கோடியை அமுதசுரபிக்கு மாற்றியுள்ளனா். இதற்கு அனுமதி தந்தது யாா்?

இப்பிரச்னையில் துணைநிலை ஆளுநா் தலையிட்டு, முழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றாா் நாராயணசாமி. பேட்டியின்போது இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்த பாபு நடராஜன் உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments