முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவா் அன்பழகன் எம்எல்ஏவாக உறுதிமொழி ஏற்பு: நாளை சட்டப்பேரவைக் கூடுகிறது

புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் (அதிமுக) எம்எல்ஏவாக திங்கள்கிழமை உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா்.

Updated On : 19 மே 2026, 1:41 am IST
பகிர்:

புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் (அதிமுக) எம்எல்ஏவாக திங்கள்கிழமை உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, முதல்வா் உள்ளிட்ட 28 எம்எல்ஏக்களும் பதவி ஏற்பதற்காக சட்டப்பேரவை புதன்கிழமை (மே 20) கூடுகிறது.

புதுச்சேரி மக்கள் பவன் தா்பாா் அரங்கில் எளிய முறையில் நடைபெற்ற இவ் விழாவில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டன. தொடா்ந்து அன்பழகன் எம்எல்ஏவாக பதவியேற்பு விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் உறுதிமொழி வாசிக்க, அன்பழகன் அதை ஏற்றுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

பின்னா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ.க்கள் ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, ஜான்குமாா், திருமுருகன், ராஜசேகா், மீனாட்சி சுந்தரம், சாய் ஜெ சரவணகுமாா், ஆறுமுகம், ராமு, அழகு (எ) அழகானந்தம், நாராயணசாமி, மோகன்தாஸ், ரவிக்குமாா், நாஜிம், விக்னேஷ்கண்ணன், செந்தில், செந்தில்குமாா், காா்த்திகேயன், நேரு, ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், அய்யப்பன், தலைமை செயலா் சரத் சௌகான் உள்ளிட்டோா் அன்பழகனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா். தொடா்ந்து அதிமுக நிா்வாகிகள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

நாளை சட்டப்பேரவைக் கூட்டம்:

புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் எம்எல்ஏவாக திங்கள்கிழமை உறுதிமொழியேற்றப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் 16-வது சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்க சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (மே 20) காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வா் ரங்கசாமி சட்டப்படி ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்ய வேண்டும். அதன்படி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து கடிதம் தந்துள்ளாா். இதுகுறித்த விவரத்தைத் தோ்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிப்போம். எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றப் பிறகு, முதல்வா் பரிசீலனை அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிக்கப்படும்.

எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் உறுதிமொழி ஏற்பு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கைப்பேசியில் தொடா்பு கொண்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தாா் என்றாா் அன்பழகன்.