தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் திங்கள்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் திங்கள்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திங்கள்கிழமை நள்ளிரவு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் அருள்தந்தை ஜோசப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு பாண்டி சாலை சி.எஸ்.ஐ. தூய ஜேம்ஸ் தேவாலயத்தில் இமானுவேல் கோவில் பிள்ளை தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாபாளையத் தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் பங்குத் தந்தை ஆல்பர்ட் பெலிக்ஸ் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. தேவாலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பை சித்திரிக்கும் அலங்காரக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, புத்தாடைகள் அணிந்து தேவாலயங்களுக்கு வந்தவர்கள் இனிப்புகள் வழங்கியும், கேக்குகள் வெட்டியும் மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல, விழுப்புரம் பழைய நீதிமன்றச் சாலையில் உள்ள டி.இ.எல்.சி. தேவாலயம், கலைஞர் நகரில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அங்கு நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனைகளில் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி தொடங்கி, அதிகாலை 1.30 மணி வரை நடைபெற்றது. திருப்பலிக்கு பங்குத்தந்தை எல்.ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
பிரார்த்தனை நிறைவடைந்ததும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும், கேக்குகளையும் பரிமாறி மகிழ்ந்தனர்.
மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் குடில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதேபோல, கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஆற்காட் லுத்திரன் திருச்சபை பெதஸ்தா ஆலயத்திலும் இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.