ரூ.8 கோடி நில மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
உளுந்தூர்பேட்டை அருகே கப்பல் உடைக்கும் தொழிலில் பங்கு தருவதாகக் கூறி ரூ.8 கோடி நிலத்தை மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே கப்பல் உடைக்கும் தொழிலில் பங்கு தருவதாகக் கூறி ரூ.8 கோடி நிலத்தை மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்த செல்வராஜ் (65) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த புகார் மனுவில் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சமுத்திரக்குளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கப்பல் பாய் (எ) ஜஹாங்கீர் என்பவர் பழக்கமானார். இவர், கப்பலில் வேலை செய்ததாகவும், பழைய கப்பல்களை ஏலம் எடுத்து உடைத்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார். அதற்காக, நிலம் தனது பெயரில் இருக்க வேண்டும் என்றும், அதனால், அவரது பெயருக்கு என்னுடைய நிலத்தை மாற்றித்தருமாறு கூறினார். கப்பல் உடைத்து விற்று கிடைக்கும் லாபத்தில் பாதி தொகை எனக்கு தருவதாகவும், மீண்டும் நிலத்தையும் கொடுத்து விடுவதாகவும் கூறினார். இதனை நம்பி கடந்த 23.5.2017 அன்று, உளுந்தூர் கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான 2.5 ஏக்கர் நிலத்தை ஜஹாங்கீர் பெயருக்கு மாற்றிக் கொடுத்தேன். 2017 செப்டம்பரில் மீண்டும் நிலத்தை எனது பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினார். ஆனால் கூறியபடி எனக்கு மாற்றித்தரவில்லை.
எனது நிலத்தை மோசடி செய்ததாக அப்போது, நில அபகரிப்புத் தடுப்பு போலீஸில் புகார் செய்தேன். அதன்பிறகு, ரூ.1.34 கோடி தொகையை வழங்கினார். ஆனால் மீதித்தொகைய வழங்கவில்லை. ஆகவே, ஜஹாங்கீர் மோசடி செய்த நிலத்துக்கு, தர வேண்டிய தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு புகார்: அதேபோல, ஜஹாங்கீர் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டது. எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்த மஸ்கர்(44) என்பவர் கொடுத்த புகாரில், கப்பல் உடைக்கும் தொழில் செய்ய ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ஜஹாங்கீர் கிரயம் பெற்று மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மோசடி செய்யப்பட்ட நிலத்தில் இருந்த பயிரை ஜஹாங்கீரின் ஆதரவாளர்கள் சேதப்படுத்திவிட்டனர். மேலும்,
அந்த நிலத்தையும் விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். ஆகவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்
தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.