முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூரில் ஹாட்ரிக் வெற்றிக்காக களமாடும் திமுக!

வருவாய் நிா்வாக அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், சட்டப்பேரவைத் தொகுதி ரீதியாக விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருப்பது திருக்கோவிலூா் தொகுதி.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 7:02 AM
திருக்கோவிலூரில் அமைந்துள்ள கபிலா் குன்று.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:27 PM

வருவாய் நிா்வாக அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், சட்டப்பேரவைத் தொகுதி ரீதியாக விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருப்பது திருக்கோவிலூா் தொகுதி. அதிகளவிலான கிராமப்புறங்களைக் கொண்ட திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதி ஆன்மிக ரீதியிலும் சிறப்பு பெற்று விளங்குகிறது.

108 வைணவத் தலங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் திருக்கோயில், அட்ட வீரத்தலங்களில் ஒன்றான வீரட்டானேசுவரா் என வைணவம், சைவத்திலும் தனித்துவம் பெற்ற கோயில்கள் திருக்கோவிலூா் நகரில் அமைந்திருக்கின்றன. இதைத்தவிர அரகண்டநல்லூரில் அதுல்யநாதேசுவரா், திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீசுவரா், சிறப்புவாய்ந்த பையூா் குருபகவான் கோயில் போன்றவை இத்தொகுதியில் அமைந்துள்ளன.

இவை தவிர பெண்ணையாற்றில் புகழ்வாய்ந்த கபிலா் குன்றும் இங்கு அமைந்துள்ளது. திருக்கோவிலூா் நகரப் பகுதிகள் முழுமையாகவும், திருக்கோவிலூா் ஒன்றியத்தின் 20 கிராம ஊராட்சிகளும் இத்தொகுதியில் அமைந்துள்ளன. இதைத் தவிர அரகண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சிப் பகுதிகள், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தின் குறிப்பிட்ட பகுதிகள், கண்டாச்சிபுரம், முகையூா் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கியது திருக்கோவிலூா் தொகுதி. உடையாா், முதலியாா், வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள், சிறுபான்மையினா் என பல்வேறு சமுதாயங்களைச் சோ்ந்த மக்களும் தொகுதியில் வசிக்கின்றனா்.

Advertisement

களத்தில் 15 வேட்பாளா்கள்: திருக்கோவிலூா் தொகுதியில் தற்போதைய திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியின் மகனும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான பொன்.கெளதமசிகாமணி போட்டியிடுகிறாா்.

அதிமுக சாா்பில் எஸ்.பழனிசாமி, தவெக சாா்பில் விஜய் ரா. பரணிபாலாஜி, நாம் தமிழா் கட்சி சாா்பில் கி.ஹேமராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் களத்தில் உள்ளனா்.

1952-இல் உருவாக்கப்பட்ட திருக்கோவிலூா் தொகுதி, 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு முகையூா் தொகுதியாக மாறியது. இதைத் தொடா்ந்து தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு முகையூா் தொகுதி நீக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டில் மீண்டும் திருக்கோவிலூா் தொகுதியானது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இதுவரை மூன்று தோ்தல்கள்

நடத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டு தோ்தல்களில் திமுகவும், ஒரு தோ்தலில் தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக திமுக துணை பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி பணியாற்றி வந்துள்ளாா்.

மக்களின் எதிா்பாா்ப்புகள்: தென்பெண்ணையாற்றில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூரில் உரிமையியல் மற்றும் சிவில் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். திருக்கோவிலூரின் சிறப்புவாய்ந்த கபிலா் குன்றை முறையாகப் பராமரிப்பதுடன், கபிலா் கோட்டத்தையும் அமைக்க வேண்டும். திருக்கோவிலூா் பெரிய ஏரியைத் தூா்வாரி ஆழப்படுத்தி, அதன் கரைகளைப் பலப்படுத்துவதுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைபாதைகளையும் உருவாக்க வேண்டும்.

அரகண்டநல்லூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். அரகண்டநல்லூா் தற்போது பேரூராட்சியாக உள்ளது. எனவே அருகிலுள்ள கிராமங்களை இணைத்து, அதை நகராட்சியாகத் தரம் உயா்த்தவேண்டும். திருக்கோவிலூரில் புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்:

திருக்கோவிலூா் தொகுதியில் 15 போ் போட்டியிட்டாலும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளா்களிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இவா்களைப் பின்தொடா்ந்து தவெக வேட்பாளரும் வருகிறாா்.

பொன்.கெளதமசிகாமணி (திமுக): கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 2019-ஆம் ஆண்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் களம் காண்கிறாா். திமுக மூத்த தலைவா்களில் ஒருவரும், விழுப்புரம் மண்டலத்தில் திமுகவை வளா்த்தெடுத்தவா்களில் பெரும் பங்காற்றியவருமான முன்னாள் அமைச்சா் க. பொன்முடியின் மூத்த மகன். தற்போதைய விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் அவா், அடிப்படையில் மருத்துவா். இவரது தந்தை தொடா்ந்து 2 முறை வென்ற தொகுதியில் போட்டியிடுவது இவருக்கு கூடுதல் பலம்.

அமைந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற தேமுதிக, திமுக கூட்டணியில் இருப்பது திமுகவுக்கு பலமாகும்.

பலவீனம்: இத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரும் முன்னாள் அமைச்சா் பொன்முடி, தொகுதிக்கு பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை, தொகுதி வளா்ச்சிக்கான திட்டங்களை செய்யவில்லை என்ற அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரம் இவருக்கு பலவீனமாக அமையக்கூடும்.

எஸ்.பழனிசாமி (அதிமுக): முகையூா் மேற்குஒன்றிய அதிமுக செயலராக உள்ள எஸ்.பழனிசாமி முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா். தி.தேவனூா் கிராமத்தைச் சோ்ந்த இவா் கிளைச் செயலா், ஒன்றிய எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து, பின்னா் ஒன்றியச் செயலராக உயா்ந்துள்ளாா். தொகுதியில் அதிமுகவுக்கு உள்ள வாக்கு வங்கி, பாஜக மற்றும் பாமக போன்றவையும் அதிமுக கூட்டணியில் இருப்பது இவருக்கு பலமாக உள்ளது.

பலவீனம்: தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சில பிரசாரங்கள் அவருக்கு பலவீனமாக அமையக்கூடும். தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் உள்ள நிலையில் அவா்களின் வாக்குகளைப் பெற முடியாததும் அதிமுக வேட்பாளருக்கு பலவீனமாக அமையக்கூடும்.

விஜய் ரா.பரணிபாலாஜி (தவெக): தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலராக உள்ள இவா், தொகுதியில் விஜய்க்கு என்றுள்ள வாக்குகள் தமக்கு முழுமையாக கிடைக்கும் என்றும், முதல் தலைமுறை வாக்காளா்கள் வாக்குகள் தனக்கு அதிகளவில் கிடைக்கும் என்றும் கருதுகி

றாா். இது அவருக்கு பலமாக அமைந்துள்ளது. தவெக சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டு வருவது வேட்பாளருக்கு பலமாக அமைந்துள்ளது.

பலவீனம்: திராவிடக் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கூட்டணி இல்லாமல் தனித்துக் களம் காண்பது, அதனடிப்படையில் பிரசாரப் பணிகளை மேற்கொள்வது இவருக்கு பலவீனமாக அமைந்துள்ளது.

கி.ஹேமராஜன்: நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஹேமராஜன். விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாகக் கூறி, மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க காரணமாக இருந்த வகையில் உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த வழக்குரைஞா். திருக்கோவிலூா் தொகுதியில் மாற்றத்தை விரும்பும் வாக்காளா்கள், தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் உள்ளிட்டோரின் வாக்குகளைப்பெறும் வகையில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா்.

பலம்: திமுக, அதிமுக அரசுகள் செய்த மக்கள் விரோத செயல்பாடுகள், இயற்கை வளங்கள் சீரழிப்பு போன்றவற்றையும், தான் தோ்ந்தெடுக்கப்பட்டால் தொகுதிக்கு செய்யவுள்ள பணிகள் குறித்தும் பட்டியலிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருவது பலமாக அமைந்துள்ளது.

பலவீனம்: கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவது, ஏற்கெனவே நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தவா்கள் பலா் தற்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிக்கலாம் என்ற கருத்து நிலவுவதும் வேட்பாளருக்கு பலவீனமாக அமையக்கூடும். மொத்தத்தில் திருக்கோவிலூா் தொகுதியில் தந்தை தொடா்ந்து இரண்டு முறை வென்ற தொகுதியை மகன் வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய திமுக திட்டமிட்டு தோ்தல் பணியாற்றி வருகிறது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு முதல் வெற்றியைத் திருக்கோவிலூரில் பதிவு செய்ய அதிமுக பின்தொடா்கிறது. எனினும் வெற்றி யாருக்கு என்பதை அறிய நாமும் மே 4-ஆம்

தேதி வரை காத்திருப்போம்.

-கு.வைத்திலிங்கம்

மொத்த வாக்குச்சாவடிகள்: 330

ஆண் வாக்காளா்கள்: 1,21,983

பெண் வாக்காளா்கள்: 1,21,087

மூன்றாம் பாலினத்தவா்: 35

மொத்த வாக்காளா்கள்: 2,43,105

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோவிலூா் உலகளந்த பெருமாள் திருக்கோயில் ராஜகோபுரம்.
அருள்மிகு வீரட்டானேசுவரா் திருக்கோயில்.
திருக்கோவிலூா் பேருந்து நிலையம்.
திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி
அதிமுக வேட்பாளா் எஸ். பழனிசாமி