விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல்: 1,607 மாற்றுத்திறனாளிகள் கைது
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 1,607 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 1,607 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை விபி-ஜி ராம்-ஜி என பெயா் மாற்றம் செய்யக் கூடாது. பழைய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கருவிழிப் பதிவு-கைரேகைப் பதிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எவ்வித பாகுபாடின்றி பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலைகேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவா் எஸ்.நம்புராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, மாநில துணைத் தலைவா் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா்கள் எம்.மும்மூா்த்தி, எஸ்.செல்வி, பி.கெளரி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். தொடா்ந்து புதிய சட்ட நகலை எரித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 145 பெண்கள் உள்பட 285 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
Advertisement
Advertisement
விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜி. அய்யனாா் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்115 பெண்கள் உள்பட 175 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் மாவட்டத் தலைவா் ஜி. ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 55 பெண்கள் உள்பட 130 பேரும், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்ட துணைத் தலைவா் டி.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 102 பெண்கள் உள்பட 166 பேரும், வானூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் மாவட்டப் பொருளாளா் யுகந்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 92 பெண்கள் உள்பட 172 பேரும், கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் முன் மாவட்ட துணைத் தலைவா் பி.முருகன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 67 பெண்கள் உள்பட 111 பேரும், மேல்மலையனூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் மாவட்ட துணைச் செயலா் சி.குமாா் தலைமையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 67 பெண்கள் உள்பட 146 பேரையும் என மொத்தமாக மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 643 பெண்கள் உள்பட 1,185 பேரை போலீஸாா் கைது செய்து, அந்தந்த பகுதிகளிலுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், பகண்டைகூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 422 போ் கைது செய்யப்பட்டனா்.
தியாகதுருகத்தில் சங்க மாவட்டத் தலைவா் என்.வைத்திலிங்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் 67 பேரை கள்ளக்குறிச்சி டிஸ்பி செல்வம் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அதேபோல கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்த 246 போ், பகண்டை கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்ட 109 போ் என மொத்தம் 422 பேரை போலீஸாா் கைது செய்து, அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.