முகப்பு
ஜோதிட கட்டுரைகள்

தடைகளை ஏணிகளாக்கும் சிம்மம்!

சிம்ம ராசிக்கார்களின் குணநலன்கள் பற்றி..

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:30 AM
சிம்மம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:57 PM

பன்னிரண்டு ராசிகளில் தொட்டாலே ‘ஷாக்’ அடிக்கும் கம்பீர சக்தி கொண்ட ராசி சிம்மம். இந்த ராசியின் அதிபதி, தலை கிரகமும் தந்தை காரகனுமான சூரியன். சூரியன் நெருப்பு கிரகம்; அதேபோல் அவரது சொந்த வீடான சிம்மமும் நெருப்பு தத்துவம். காலப்புருஷ தத்துவப்படி சிம்மம் 5ம் பாவமாகும். இது வயிற்றுப் பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே இவர்களின் உடல் அமைப்பிலும், குணத்திலும் ஒரு உள் வெப்ப ஆற்றல் பிரதிபலிக்கும். இங்குப் பூர்வ புண்ணியம், புத்திர பாக்கியம், மந்திர–தெய்வ அனுக்கிரகம், குலதெய்வ அருள் ஆகியவற்றைக் குறிக்கும் சுபஸ்தானம்.

குறிப்பாகத் தந்தையின் புண்ணிய பலமும், குடும்ப கௌரவமும், மரபு பெருமையும் இங்கு வெளிப்படும். ஜோதிட விதிப்படி லக்ன புள்ளி அமர்ந்துள்ள சாரநாதன் மிகவும் முக்கியமானவன். சிம்ம ராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்கள் கேதுவின் - மகம், சுக்கிரனின் பூரம் மற்றும் சூரியனின் உத்திரம் (1ம் பாதம்). இந்த நட்சத்திரங்களின் சாராதிபதிகள் சிம்மத்தின் குணநலன்களை ஆழமாக வடிவமைக்கின்றனர். சிம்மம் என்பது சாதாரண ராசி அல்ல - இது ஒரு அரச ராசி.

ஜாதகத்தில் சூரியன் பலமுடன் இருப்பதோடு, பிற கிரகங்களும் சுபபலத்துடன் இணைந்தால், அவர்களின் வாழ்க்கை தனித்துவமான உயர்வை அடையும். "நெருப்பில் சுட்ட புடம் தங்கம் போல" அவர்கள் குணமும், ஆளுமையும், செயல்திறனும் செம்மையடைந்து மேலும் ஜொலிக்கும். இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்; இயற்கையே இவர்களைத் தலைமைப் பொறுப்புக்காகப் படைத்ததுபோல தோன்றும். அவர்கள் இருக்கும் இடமே ஒரு மேடையாக மாறிவிடும், அதோடு அவர்கள் நின்றாலும் தலைமை வெளிப்படும்; பேசினாலும் ஆணைத்தன்மை ஒலிக்கும். மக்களை ஈர்க்கும் காந்த சக்தி இவர்களுக்கு இயற்கையிலேயே உண்டு. கூட்டத்தில் இருந்தாலும் தனித்துத் தெரியும் ஆளுமை, தீர்மானங்களில் திடநிலை மற்றும் செயல்களில் தைரியம், மனதில் தன்னம்பிக்கை - இவை அனைத்தும் சிம்ம ராசியின் சுபபலத்தின் அடையாளங்களாகும்.

Advertisement

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:57 PM

இந்த லக்னத்தின் சின்னம் சிங்கம். சிங்கம் காட்டின் அரசனாக விளங்குவது போல, இயல்பாகவே இவர்கள் நாடோ வீடோ எங்கிருந்தாலும் தங்களுடைய தலைமைத் தன்மையை நிலைநிறுத்தப் பாடுபடுவார்கள். சிங்கத்தின் முக்கிய பண்புகளான கம்பீரமான தோற்றம், செம்மையான ரோமம், கண்களில் ஒளி, நிமிர்ந்த கம்பீர நடை, பயமில்லாத பார்வை, கட்டுக்கோப்பான உடல், பிறரை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியம், தனிமையை விரும்பும் இயல்பு மற்றும் சுதந்திரமாக அலைந்து திரியும் மனப்பான்மை ஆகியவை இயல்பாகவே இவர்களுக்கு இருக்கும். நிகழ்காலத்தைச் சந்தோஷமாக, ராஜபோகமாக அனுபவித்து வாழ விரும்பும் மனப்பான்மை இவர்களுக்கு அதிகம். இந்த ராசிக்காரர்கள் "பாம்புகளை ஏணிகளாக்கும் சிங்கம்" போன்றவர்கள். அதாவது, இவர்கள் எதிரிகளையும் தடைகளையும் தங்கள் சாதக சக்தியாக மாற்றி, அவற்றையே முன்னேற்றத்தின் படிக்கட்டுகளாகக் கொண்டு வெற்றி காணுவார்கள். இவர்களின் செயலால் பலருக்கும் நன்மை கிடைக்கும்.

"சிம்ம லக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும்" என்பது புலிப்பாணி கூறியுள்ளார்.

சிம்ம லக்கினத்தினர் சவால்களுக்கு அஞ்சாதவர்கள். தலைமைப் பொறுப்பு, நிர்வாகத் திறன், கௌரவம் ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுத்து வாழ்பவர்கள். சுயமரியாதை, துணிவு, பொருளாதார முன்னேற்றம் மீது தீவிர முயற்சி, தான தர்மங்களில் ஈடுபாடு, எதிர்கால திட்டமிடுதல், நேர்மை, கடவுள் நம்பிக்கை, தீர்மானமாக முடிவு எடுக்கும் திறன் ஆகியவை இவர்களின் முக்கிய குணங்களாகும். ஆனால் ஆடம்பர விருப்பம், புகழாசை, முன்கோபம், பிடிவாதம், அளவுக்கு மீறிய செலவு, அதிக ஆதிக்க மனப்பான்மை, ஈகோ, தாம்பத்திய கருத்து வேறுபாடுகள் போன்றவை இவர்களின் முக்கிய பலவீனங்கள். நம்பிக்கை துரோகம் செய்தவர்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். பல நேரங்களில் இவர்களின் பிரச்னைகளுக்கு இவர்களே காரணமாகி விடுவார்கள்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:59 PM

சிம்ம லக்கினாதிபதி சூரியன் பலம் பெற்றிருந்தால், ஒருவரை கோடீஸ்வர நிலைக்கும் உயர்த்தும் ஆற்றல் உண்டு. குறிப்பாகத் தந்தை வழி தொழில், அரசியல் ஈடுபாடு, அதிகாரம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் அதிகம் காணப்படும். சிம்மத்தில் சூரியன் சுபபலத்துடன் இருந்தால், அதிகாரமிக்க ஆளுமையாக உயர்ந்து, உயர் கௌரவப் பதவிகள், பத்திரிக்கை, வணிகம், தலைமை நிர்வாகம், அரசாங்கப் பணி, ரியல் எஸ்டேட், மருத்துவத் துறைகள் போன்றவற்றில் சிறந்து விளங்குவர். இவர்கள் அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள்; எப்போதும் தலைமை நிலையை நாடுவார்கள். சிம்ம லக்கினதோடு - ஒருசில கிரக தொடர்பு பெரும்போது தொழில்கள் மாறுபாடும்.

எடுத்துக்காட்டாக சந்திரன் + கேது சம்பந்தம் பெரும்போது - கண் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவராகும் யோகம் ஏற்படும். அதுவே குரு சேர்க்கை பெரும்போது - அரசு ஆசிரியர், பேராசிரியர், கல்வி நிர்வாகம் போன்ற துறைகளில் உயர்வு. நெருப்பு ராசியுடன் செவ்வாய் சேர்க்கை கடுமையான முரட்டுத் தன்மையான தேசியப் பாதுகாப்புப் படை, ராணுவ தலைமை பொறுப்பு மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் வேலை செய்வார்கள்.

சூரியன் பலவீனம் ஆக இருந்தால் தொழிலில் பல தடை, தவறான முறையில் சொத்து சேர்த்தல், மேல் அதிகாரிகளுடன் மோதல் மற்றும் எதிரிகள் தொந்தரவு அதிகம் ஏற்படும். பன்னிரண்டுக்கு உரிய சந்திரன் பலமுடன் இருந்தால் உணவு வியாபாரத்தில், வர்த்தக துறையில் சிறந்து விளங்குவார். இவர்கள் உணர்ச்சி வசப்படாமல் தொழிலைச் செய்தால், அவர்கள் வெளிநாட்டில் புகழ் பெறுவார்கள். அது அவரவர் அசுப/சுப தன்மை பொறுத்து மாறுபடும்.

பொதுவாக ஜாதக கட்டத்தில் 6, 8, 12ம் அதிபதி உச்சம் பெரும் நேரம் நோய், கடன் போன்ற அதிக சோதனைகளையும் தரும். சூரியனின் தீவிர தாக்கத்தால் மூளை சம்பந்தமான பாதிப்பு, தலைச்சுற்றல், பார்வைக் குறை, எலும்பு மண்டல பலவீனம் - குறிப்பாக முதுகெலும்பு, கல்லீரல், இருதயம் தொடர்பான சிகிச்சைகள், உஷ்ண நோய்கள், எதிர்ப்புச் சக்தி குறைவு, காய்ச்சல், பித்தம், மற்றும் உயிர்ச்சத்து டி, தாமிரம், கால்சியம் குறைபாடு ஏற்படும். ஆனால், இத்தகைய பாதிப்புகள் தசா-புத்தி அல்லது கோசார சம்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே வெளிப்படும். இவர்களுக்குச் செவ்வாய் பாதகாதிபதியாக வந்தாலும் அவரே முழு யோகர். சூரியனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் பாதகத்தன்மையைக் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பர். ஆனால் சனி, ராகு கேது தொடர்புகொண்டால் பாதகத் தன்மை அதிகம் ஏற்படும்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:02 PM

சிம்மத்திற்கு புதன் 2,11-க்கும் உரியவர், இவர் இந்த லக்னகாரர்களுக்கு நன்மையான விஷயங்களைச் செய்வார். புதன் வலுத்து இருந்தால் இவர்களின் பேச்சு அனைவரையும் வசியப்படுத்தும். இங்குப் பகை கிரகமான சனி 6, 7க்கும் உரியவர். ஜோதிடத்தில் சனி பகவான் சூரியனின் மகன் ஆவார். இவர்கள் அசுப தன்மை பெற்றால் தந்தை மகனுக்கான ஒற்றுமை பாதிக்கும். அதேசமயம் மகளாக இருந்தால் அந்த தாக்கம் அவ்வளவாக இருக்காது. அதோடு தொழிலாளர் பிரச்னை, அரசாங்க சிக்கல் மற்றும் தந்தையினால் செலவு ஏற்படும். அதேபோல் 3, 10க்கு உரிய சுக்கிரன் பாவராக வருவார்.

சனி சுக்கிரன் சுபத்தன்மை பெற்றால் ஜாதகரின் பன்மடங்கு முயற்சி தொழிலில் வெற்றியை ஏற்படுத்தும். அதோடு தந்தை உறவில் லாபம் ஏற்படும். இங்கு 5, 8க்கும் உரிய குரு பாவத்தில் வலுவாக இருக்கும்போது, அது ராஜயோகத்தையும், திடீர் அதிர்ஷ்டம், தனலாபம், மனை யோகத்தைத் தரவல்லது. ஆனால் சில நேரங்களில் நட்புத்தன்மை கொண்ட குரு சுக்கிரனோடு சேர்ந்து மரணத்திற்கு நிகரான துன்பத்தையும் தருவார். இருப்பினும் லக்கினாதிபதி சூரியன் வலுத்து இருந்தால் ஆயுள் பங்கம் ஏற்படாது. குழந்தைப் பாக்கியத்தில் சிலருக்கு தாமதம் அல்லது நீண்டகால மருத்துவச் சிகிச்சை தேவைப்படும்.

பரிகாரம்

சிம்ம ராசி/ லக்னக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம். அதோடு இவர்கள் நரசிம்மர், சிங்கரூப்பினி, திருமீச்சூர், ஞாயிறு கோயில் மற்றும் சூரிய பகவான் வழிபட்ட கோயில்களில் பசும் பால், பன்னீர், இளநீர் அபிஷேகப்பொருள் வாங்கிக் கொடுக்கலாம்.

Whatsapp:8939115647

vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.