கார் விற்பனையில் வீழ்ச்சி
பிப்ரவரி மாதம் நடைபெற்ற கார், பைக் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள்
பிப்ரவரி மாதம் நடைபெற்ற கார், பைக் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
மாருதி சுஸýகி, டாடா மோட்டர்ஸ் உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களின் விற்பனை சரிவடைந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி குறைவாகவே இருந்தது.
இந்தியாவின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸýகியின் ஒட்டுமொத்த விற்பனை 8 சதவீதம் குறைந்தது. பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 1,09,567 வாகனங்கள் விற்பனை ஆகின. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்நிறுவனம் 1,18,949 வாகனங்களை விற்பனை செய்தது. உள்நாட்டு பயணிகள் கார் விற்பனை அளவு 10 சதவீதம் குறைந்தது. இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் 83,865 வாகனங்கள் விற்பனை ஆனது. கடந்த பிப்ரவரியில் 94,118 வாகனங்கள் விற்பனை ஆகின.
Advertisement
ஆயினும், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சற்றே அதிகரித்தது. கடந்த மாதத்தில் 11,612 வாகனங்கள் ஏற்றுமதி ஆகின. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11,296 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவின் 2-வது பெரும் கார் தயாரிப்பாளரான ஹுண்டாய் தனது ஒட்டுமொத்த விற்பனையில் 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையில் 7 சதவீதம் குறைந்தபோதிலும் ஏற்றுமதியில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 11 சதவீதம் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. பயணிகள் வாகன விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியும் மினி டிரக் உள்ளிட்ட சரக்கு வாகன விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
டாடா மோட்டர்ஸின் ஒட்டுமொத்த விற்பனை 32 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பயணிகள் வாகன விற்பனையில் 69 சதவீதமும் சரக்கு வாகனங்களில் 8 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 26 சதவீதம் குறைந்தது. ஹோண்டா, ஃபோர்டு, அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த வாகன விற்பனை முறையே 26 சதவீதம், 30 சதவீதம், 9 சதவீதம் குறைந்தது.
2 மற்றும் 3 சக்கர வாகனங்களை தயாரிக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை சற்றே குறைவடைந்துள்ளது. இவ்வாண்டு பிப்ரவரியில் டிவிஎஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,65,696 வாகனங்களை விற்பனை செய்தது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் 1,72,061 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆயினும் ஏற்றுமதி 22 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
ஹோண்டா மோட்டர்சைக்கிள்-ஸ்கூட்டர் நிறுவனத்தின் விற்பனை 10 சதவீதம் அதிகரித்தது. யமஹா நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனையில் 16 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. உள்நாட்டு விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியும் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியும் இருந்தது.