முகப்பு
சென்னை

எண்ணூர் துறைமுகத்தின் லாபம் ரூ.218 கோடி

கடந்த நிதியாண்டில் எண்ணூர் துறைமுகம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 218 கோடி ஈட்டியுள்ளது என துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் புதன்கிழமை சென்னையில் தெரிவித்தார்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 3:36 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

கடந்த நிதியாண்டில் எண்ணூர் துறைமுகம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 218 கோடி ஈட்டியுள்ளது என துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் புதன்கிழமை சென்னையில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எண்ணூர் துறைமுகம் 2012-13-ம் நிதியாண்டில் சுமார் 18 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ.307 கோடி வருவாயாக ஈட்டியுள்ளது. இதில் நிர்வாகச் செலவினங்கள் போக, வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 218 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது ரூ.120 கோடி அதிகமாகும்.

எண்ணூர் துறைமுகத்தில் தற்போது 2 நிலக்கரி கையாளும் தளங்கள் உள்ளன. மேலும் இரண்டு தளங்களை அமைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவது நீதிமன்றத் தடை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலக்கரியைக் கையாள சென்னைத் துறைமுகம் நிரந்தரமாகத் தடை செய்யும் நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் அதிகப்படியான நிலக்கரியைக் கையாளும் வகையில் கூடுதல் கொள்திறனுடன் உள்ளது.

Advertisement

வளர்ச்சித் திட்டங்கள்: கடந்த ஆண்டில் மட்டும் 475 கப்பல்கள் வந்து சென்றுள்ளன. மிக வேகமாக வளர்ந்து வரும் எண்ணூர் துறைமுகம் தனது வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இயற்கை எரிவாயு முனையம், சரக்குப் பெட்டக முனையம், பல்சரக்கு முனையம் உள்ளிட்டவைகளை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் துறைமுகத்தின் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் ரயில் பாதைக் கட்டமைப்பு, கூடுதல் சாலைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் பணிகளில் துறைமுகம் ஈடுபட்டுள்ளது. நடப்பாண்டில் 21 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள திட்டமிடப்பட்டுள்ளது.

வரியில்லா பங்குப் பத்திரம் வெளியீடு: வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக கப்பல் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ரூ.1,000 கோடி நிதி திரட்டுவதற்கான முயற்சியில் எண்ணூர் துறைமுகம் ஈடுபட்டது. ஆனால் ரூ.95 கோடிக்கு மட்டுமே நிதி திரட்ட முடிந்தது. குறைவான வட்டி விகிதம், பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, குறைவான கால அளவு போன்ற காரணங்களால் திட்டமிட்ட அளவிற்கு நிதியைத் திரட்ட முடிய வில்லை. இருப்பினும் மீண்டும் அதேபோன்ற முயற்சியில் ஈடுபடுவோம். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றார் பாஸ்கராச்சார்.

பேட்டியின்போது துறைமுக இயக்குநர் சஞ்சய் குமார், பொதுமேலாளர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி அட்சயநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.