விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அவசர விசாரணை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக கருதி விடுமுறை நாளான வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக கருதி விடுமுறை நாளான வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின்போது அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணி நடத்தவும், மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக காவல் துறையின் அனுமதி வேண்டி அக்கட்சியினர் விண்ணப்பித்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரணியால் சட்டம் ஒழங்கு பிரச்னை எழக் கூடிய வாய்ப்பு இருப்பதால், ஏன் பேரணிக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் கேட்டு காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகி பேரணிக்கு அனுமதி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முடிவு செய்தனர். எனினும் தெலுங்கு வருடப் பிறப்பு காரணமாக வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வாலை வியாழக்கிழமை காலை அவரது வீட்டில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முறையிட்டனர். அப்போது இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் கட்சியின் ஊர்வலத்தால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாது என்றும், நிகழ்ச்சிகள் மிகவும் அமைதியாக நடைபெறும் என்றும் நீதிபதியிடம் உறுதி அளித்தார்.
அவரது வாக்குறுதியைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இது தொடர்பாக காவல் துறையினரின் கருத்தை அறிந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசுத் தரப்பு வழக்குரைஞர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.