முகப்பு
சென்னை

ஆம்னி பஸ்கள் மாநகருக்குள் நுழைய மீண்டும் தடை வருமா

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பகல் நேரங்களில் ஆம்னி பஸ்கள் மாநகருக்குள் நுழைவதற்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 2 மே, 2013 at 4:56 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பகல் நேரங்களில் ஆம்னி பஸ்கள் மாநகருக்குள் நுழைவதற்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் 800-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆம்னி பஸ்கள் மாநகருக்குள் இயக்கப்பட்டதோடு, சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதால் மாநகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டன.

Advertisement

இதைத் தடுக்கும் வகையில், ஆம்னி பஸ்கள் மாநகருக்குள் நுழைய கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையத்தில் மட்டுமே பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.

அதன்படி ஆம்னி பஸ்கள் அனைத்தும் பஸ்நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், மாநகரில் நெரிசல் குறைந்தது.

இதற்கிடையே, அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசு உத்தரவை தள்ளுபடி செய்து கடந்த 2003-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதில், ஒப்பந்த அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பர்மிட்டுகளை பெற்றுள்ள ஆம்னி பஸ்களை சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(ஜி)-க்கு எதிரானது.

இந்த பர்மிட் பெற்றுள்ள பஸ்கள் நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்லவோ அல்லது இறக்கிவிடவோ தடை வதிக்க முடியாது. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்ற வகையில் மாநகரில் சாலை ஓரங்களில் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைக்கக்கூடாது. அதே நேரம், மாநகருக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஆம்னி பஸ்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சென்னை மாநகருக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சிறிய வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கும்போது, சென்னை மாநகரில் 500 ஆம்னி பஸ்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பர்மிட் பெற்றுள்ள இந்த ஆம்னி பஸ்கள், குழுவாக உள்ள பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு.

ஆனால், இவர்கள் பர்மிட் அனுமதியை மீறி அரசு பஸ்களைப் போல் வெவ்வேறு தரப்பு பயணிகளை ஏற்றிச் சென்று, வெவ்வேறு ஊர்களில் இறக்கி விடுகின்றனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி தியாகராய நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பல மணி நேரம் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேல் நிறுத்திவைத்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் "டிராஃபிக்' ராமசாமி கூறியது:

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே ஆம்னி பஸ்கள் இதுபோன்ற விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளபோதும், போக்குவரத்துப் போலீஸார் கண்டுகொள்வதில்லை.

இந்த பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மாநகருக்குள் வருவதில்லை. மாறாக, அனுமதியில்லாத பார்சல்களை ஏற்றிச்செல்லவும், பயணிகளை இறக்கி விடுவதற்காக மட்டுமே மாநகருக்குள் வருகின்றன.

எனவே, அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மாநகருக்குள் இயக்க இந்த பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.