முகப்பு
சென்னை

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்தப்படுமா?

தேவையற்ற குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2013 at 3:41 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

தேவையற்ற குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் எம்.இ., எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப் படிப்புகளின் சேர்க்கைக்காக "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை' (டான்செட்) சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் "கேட்' (பட்டதாரி நுண்ணறிவுத் தேர்வு) மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு மூலம் இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இதில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு உள்ளதுபோல் இதற்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வே நடத்தப்படுகிறது.

இரட்டைச் சாளர கலந்தாய்வு: ஆனால், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மட்டும் இரட்டை சாளர கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அதாவது, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 360 இடங்களுக்கு முன்கூட்டியே தனியாக சென்னையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன் பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் மற்றும் கலை - அறிவியல் கல்லூரிகளில் உள்ள 5460 எம்.சி.ஏ. இடங்கள் மற்றும் எம்.பி.ஏ. இடங்களுக்கு கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது, இந்த இரட்டை கலந்தாய்வு முறையால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாக மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தியபோதும், பல பல்கலைக்கழகங்கள் தாமதமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற முடியாமல் போகும் மாணவர்கள், "டான்செட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தபோதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த ஆண்டும் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் இளநிலைப் பட்ட தேர்வு முடிவுகளை தாமதமாக வெளியிட்டதால் இளநிலை பட்ட இறுதிப் பருவ மதிப்பெண் சான்றிதழைப் பெற இயலாமல் போன 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் சனிக்கிழமை (ஜூலை 20) நடத்திய எம்.சி.ஏ. கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு படிப்புக்கு இதுபோன்று இரண்டு கலந்தாய்வுகள் நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு தேவையற்ற கால விரயம், கூடுதல் செலவுகள் ஏற்படுவதோடு மனித ஆற்றலும் வீணடிக்கப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்துவதன் மூலம் குழப்பங்கள் மற்றும் கூடுதல் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராஜாராம் கூறியது: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 20-ஆம் தேதி நடத்தப்பட்ட எம்.சி.ஏ. கலந்தாய்வில் பங்கேற்க இளநிலை பட்ட இறுதிப் பருவ மதிப்பெண் சான்றிதழ் இல்லாத 46 மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவர்கள் மீதமுள்ள இடங்களில் பின்னர் அனுமதிக்கப்படுவர். அல்லது கோவை பொறியியல் கல்லூரியில் 22-ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வில் அவர்கள் பங்கேற்கலாம்.

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக இரட்டை சாளர கலந்தாய்வுதான் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்துவது சாத்தியமானதுதான்.

இதன் மூலம், மதிப்பெண் சான்றிதழ்கள் இல்லாமல் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை மாற வாய்ப்புள்ளது.

விரைவில் இதற்கென ஒரு குழு அமைத்து எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.