முகப்பு
சென்னை

தினமணி செய்தி எதிரொலி: செயல்படத் தொடங்கியது திருவொற்றியூர் எரிவாயு தகன மையம்

Updated On : 22 ஜூலை 2013, 3:14 am IST
பகிர்:

திருவொற்றியூர், ஜூலை 21: இரண்டு முறை திறப்பு விழா கண்டு செயல்பாட்டுக்கு வராத திருவொற்றியூர் எரிவாயு தகன மையம் ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

திருவொற்றியூரில் ரூ.1.10 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எரிவாயு தகன மையம் 2011-ல் திறக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களில் மூடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர மேயர் சைதை எஸ். துரைசாமி நேரில் ஆய்வு செய்து எரிவாயு தகன மையத்தை சீரமைத்து உடனடியாகத் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தகன மையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மேலும் புதுப்பிக்கப்பட்ட எரிவாயு தகன மையத்தை கடந்த ஜூன் 17 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி திறந்தும் வைத்தார். ஆனாலும் இம்மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை. பழைய முறையிலேயே சடலங்கள் விறகு, எரு ராட்டை உள்ளிட்டவைகளால் எரிக்கப்பட்டன.

இம்மையம் செயல்பாட்டுக்கு வராததற்கான காரணம் குறித்து மண்டலக் குழுத் தலைவர் தனரமேஷிடம் கேட்டபோது, மயான ஊழியர்களின் எதிர்ப்பால்தான் மையம் செயல்படுவதில் தடங்கல் உள்ளது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இது குறித்து ஜூலை 16-ஆம் தேதி தினமணி நாளிதழில் இரண்டு முறை திறப்பு விழா கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை என சிறப்புச் செய்தி வெளியானது.

மேயர் துரித நடவடிக்கை: இது குறித்து தகவல் அறிந்த மேயர் சைதை துரைசாமி வெளிநாட்டில் இருந்தபோதும் தகன மையத்தை உடனடியாகத் செயல்பட வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மண்டல அலுவலர் காங்கேயன் கென்னடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மயான ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதில் புதிய எரிவாயு தகன மையம் செயல்பட மயான ஊழியர்கள் ஒத்துழைப்பதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணி நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் மூன்று சடலங்கள் எரிப்பு: இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைமுதல் தகன மையம் செயல்படத் தொடங்கியது. காலடிப்பேட்டை மேற்கு மாடவீதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் எம்.இ. குமாரின் உறவினர் பார்வதி புற்றுநோய் பாதிப்பினால் சனிக்கிழமை உயிரிழந்தார்.

அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை எரிவாயு தகன மேடையில் எரியூட்டப்பட்டது. இரவு வரை மேலும் இரண்டு சடலங்கள் எரிக்கப்பட்டன.

மயான ஊழியர்கள் வேண்டுகோள்: இது குறித்து மயான ஊழியர்கள் சார்பில் ஆனந்தன் கூறியது: திருவொற்றியூர் மயானத்தில் பரம்பரையாக சடலங்களை எரிக்கும், புதைக்கும் பணியைச் செய்து வருகிறோம். இந்நிலையில் புதிய எரிவாயு தகன மையத்தை திறந்துள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் மையம் செயல்பட முழு ஒத்துழைப்பு கொடுப்போம். எங்களின் ஏழ்மை நிலை கருதி கருணை அடிப்படையில் 9 மயான ஊழியர்களையும் மாநகராட்சி ஊழயர்களாக நியமிக்க வேண்டும். இதனைத்தான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறோம். மற்றபடி தகன மையத்தை செயல்படவிடாமல் இதுவரை தடுத்தோம் என்பது தவறான தகவல் என்றார் ஆனந்தன்.

தடங்கலின்றி செயல்படக் கோரிக்கை: இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுநல ஆர்வலர் அரிமா என். துரைராஜ் கூறியது: திருவொற்றியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்மையம் செயல்படுவதில் தடங்கல் ஏற்பட்டு விட்டது. இனிமேலாவது இம்மையம் தடங்கலின்றிச் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தகன மையத்தில் உள்ள அமரர் பூங்கா, நீரருவி உள்ளிட்டவைகளை பராமரிக்க தேவையான தண்ணீரை வழங்க வேண்டும். ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் உள்ள விதிமுறைகள், திட்டங்கள் புறநகர்ப் பகுதிகளுக்கும் இன்னும் விரிவுபடுத்தாமல் இருப்பதே இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணம் கூறப்படுகிறது. எனவே இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர், மாநகர மேயர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் துரைராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments