முகப்பு
சென்னை

பீர்க்கன்கரணையில் காய்கறிகள் சேகரிப்பு ஏல மையம்

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை ஏரிக்கரை பஸ் நிலையம் அருகில் காய்கறிகள் சேகரிப்பு ஏல மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 3:11 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை ஏரிக்கரை பஸ் நிலையம் அருகில் காய்கறிகள் சேகரிப்பு ஏல மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளால் தொடங்கப்பட்டுள்ள மொத்த காய்கறிகள் சேகரிப்பு ஏல மையத்தைக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தொடங்கி வைத்தார்.

காய்கறிகளை கிராமங்களில் இருந்து காய்கறிகள் ஏல மையத்துக்கு எடுத்து வருவதற்கென 40 சதவிகித மானியத்துடன் வாகனம் அளிக்கப்படுகிறது.

Advertisement

விழாவில் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசியது: பொதுமக்கள் மலிவான விலையில் பசுமையான தரமான காய்கறிகள் பெறும் வகையிலும், விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் காய்கறிகளை இடைத்தரகர் இன்றி விற்பனை செய்து பயன் அடையும் வகையிலும், விவசாயிகளால் விவசாயிகளுக்கென தொடங்கப்பட்டுள்ள காய்கறிகள் சேகரிப்பு ஏல மையத்தை அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காய்கறிகள் அதிகம் பயிரிடப்படும் சேத்துப்பட்டு, படப்பை, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை 6 குழுக்களாக ஒருங்கிணைத்து, விவசாயத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மானியம் மூலம் வழங்கி ஊக்குவிப்பதுடன், உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்வதற்கும் வசதியாக சென்னை மாநகருக்கு அருகில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பும் ஆய்வும் அவசியம் என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எல்.சித்ரசேனன் பேசும்போது, பீர்க்கன்கரணையில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகள் சேகரிப்பு ஏல மையத்துக்கு ரூ.8 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன்கூடிய கட்டடம் விரைவில் கட்டித்தரப்பட உள்ளது. இந்த வட்டாரத்தைச் சேர்ந்த 120 காய்கறி பயிரிடும் விவசாயிகளைக் கொண்டு

உருவாக்கப்பட்டுள்ள 6 குழுவினருக்கும் காய்கறிகள் பயிரிடுவது முதல் விற்பனை வரை உறுதுணையாக இருந்து வரும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தினமும் இந்த மையத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள் ஒத்துழைத்து திட்டம் வெற்றிபெற உதவ வேண்டும் என்றார்.

பின்னர் விவசாயிகளின் கருத்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சித்ரசேனன் கேட்டறிந்தார்.

சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுக் காய்கறி மையங்களில் பறித்து ஒரிரு நாள்கள் ஆன பழைய காய்கறிகள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு தந்தால் தாங்கள் பயிரிட்டுள்ள செடிகளில் இருந்து பறித்த பசுமைக் காய்கறிகள் 3 மணி நேரத்தில் தினமும் கிடைக்க வகை செய்யும் முடியும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சில விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கலந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சித்தலைவர் எல்.சித்ரசேனன் கூறினார்.

விழாவில் தாமஸ்மலை ஒன்றியத்தலைவர் என்.சி.கிருஷ்ணன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் கோமதி, படப்பை வட்டார இயக்குனர் கரோலின், பீர்க்கன்கரணை பேரூராட்சித்தலைவர் ஏ.வி.சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.