FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஒரு கிரைம்... ஒரு திரில்லர்... அதர்வாவின் டிஎன்ஏ - திரை விமர்சனம்!

நடிகர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் திரை விமர்சனம்...

19 ஜூன் 2025, 3:19 pm IST
டிஎன்ஏ திரை விமர்சனம்!
3.5/5
டிஎன்ஏ
பகிர்:

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அதர்வாவுக்கும் நிமிஷா சஜனுக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் வாழ்க்கையை அழகாகக் கொண்டு செல்கின்றனர். இடைவேளைக்கு முன் நிமிஷாவுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனை ஊழியர்கள், உறவினர்கள் சூழ்ந்திருந்தும் குழந்தை கடத்தப்படுகிறது. அதேநேரம், விஷயம் தெரியாமல் அந்தக் குழந்தைக்கு பதிலாக வேறு ஒரு குழந்தையை நிமிஷாவிடம் கொடுக்கின்றனர். ஆனால், அது தன்னுடையது அல்ல என நிமிஷா உறுதியாகச் சொல்ல, கதை சூடுபிடிக்கிறது. கடத்தப்பட்ட அதர்வா - நிமிஷாவின் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்களா? கடத்தல் பின்னனியில் இருந்தது யார்? என்கிற அழுத்தமான கேள்விகளுடன் பரபரப்பான படமாக உருவாகியிருக்கிறது டிஎன்ஏ.

இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் பின்னணியில் இப்படம் உருவானாலும் சில முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. ஆரம்பக் காட்சிகள் சிறிய ஏமாற்றங்களைக் கொடுத்தாலும் காட்சிகள் நகர ஒரு குழந்தை பேறுக்கு பின் என்னென நிகழ்கிறது; மருத்துவமனையிலிருக்கும் தாயும் சேயும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என காட்சிகள் விரிய விரிய ஒரு கிரைம், நல்ல திரில்லராக மாறுகிறது. தன் குழந்தையைக் காணவில்லை என அதர்வா தேடும் காட்சிகளில் டுவிஸ்டுகள் அவிழ கிளைமேக்ஸில் இருக்கை நுனிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த கிரைம் திரில்லர் படங்களில் டிஎன்ஏ-க்கும் இடமுண்டு.

Advertisement

Advertisement

பார்வையாளர்களை ஏமாற்றி வெற்றிபெறும் திரைக்கதையை நம்பாமல் உண்மையாகவே ஒரு குற்றச் செயலுக்குப் பின் எவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருப்பது திரையில் தெரிகிறது. கதை வெறும் குழந்தையைக் காணவில்லை என்பது மட்டுமல்ல.

இந்தக் குழந்தைகள் ஏன் கடத்தப்படுகின்றன? பிச்சையெடுக்க வைக்க மட்டும்தானா? இல்லை; குழந்தையில்லாத பெரும் செல்வந்தர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்படுகின்றன. இதையும் வெறும் தகவலாக மட்டும் நிறுத்தாமல், குழந்தையில்லாமல் ஒரு தம்பதியை உறவுகளும் சமூகமும் இயல்பாக இருக்க விடுவதே இல்லை என்பதையும் குழந்தையில்லை என்பதை குற்றவுணர்வாக மாற்றி பலரையும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? பணம் கொடுத்து குழந்தைகளை வாங்க முன்வருவார்கள். அப்போது, குழந்தைக் கடத்தல் குற்றங்கள் அதிகரிக்கின்றன என இப்படி நிறைய விஷயங்களைப் படம் யோசிக்க வைக்கிறது.

திரைக்கதையும் எழுத்தும் படத்தின் வெற்றிக்கு நல்ல பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றன. இயல்பான கதாபாத்திரங்கள். எந்த தேவையற்ற திணிப்பும் இல்லை. ரசிகர்கள் கொதிக்க வேண்டும் என எங்கும் லாஜிக் மீறல்களைச் செய்யாமல் இருந்ததும் சிறப்பு.

முக்கியமாக, இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் குழந்தைகளைக் கட்டைப்பையில் கடத்தும் பாட்டி கதாபாத்திரமும் வசனங்கள் வழியாகவே தங்களின் குரூரத்தை முன்வைப்பது நல்ல எழுத்துக்கு உதாரணம். குழந்தை வளர்வதுபோல் கதையின் கரு மெல்ல மெல்ல வளர்ந்து அறிவியல், நம்பிக்கை, ஆன்மீகம் என மனித மனம் செல்லும் பாதைகளையெல்லாம் தொட்டிருக்கிறது.

நடிகர் அதர்வாவுக்கு இதுதான் திருப்புமுனை படமாக இருக்கும். வெற்றியைப் பார்த்து நீண்ட நாள்கள் ஆனவருக்கு நல்ல வாய்ப்பாக டிஎன்ஏ அமைந்திருக்கிறது. பழைய அதர்வா இல்லை. சிரிப்பையும் அழுகையையும் பார்வையாளருக்கு உணர்ப்பூர்வமாகக் கடத்துகிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. கதை தேர்வுகளில் கவனம் செலுத்தினால் நல்ல இடம் காத்திருக்கிறது.

நிமிஷா சஜயன், என்னமா இப்படி நடிக்கிறீங்க? இக்கதைக்கு நிமிஷா மிகச்சிறந்த தேர்வு. படத்தில் அவருக்கு ஒரு உளவியல் பிரச்னை இருக்கிறது. எப்போதும் துருதுருவென்றே இருப்பார். ஆனால், குழந்தை பிறந்து காணாமல் போனதை அறிந்ததிலிருந்து இன்னொரு உடல்மொழியைக் கொண்டுவருகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் நிமிஷாவின் ஒரு வசனத்தால் மொத்த திரையரங்கமும் விசில் சப்தத்தால் நிறைகிறது. அது ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பால் அக்கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் கொடுத்ததால்தான்.

நடிகர்கள் பாலாஜி சக்திவேலுக்கு நல்ல கதாபாத்திரம். ஆனால், காவல்துறையிலிருந்து பல குற்றங்களைப் பார்த்து பார்த்து வெறுத்துப்போனவர் அதர்வாவின் வழக்கை மட்டும் தீவிரமாக எடுத்துக்கொள்வது சிறிய குறையாகத் தெரிகிறது. ஆனால், ஒரு ஷாட்டில் பாலாஜி சக்திவேலுக்கும் குழந்தை கடத்தல் வழக்குகளுக்கும் உண்டான பிணைப்பைக் காட்டியிருக்கிறார்கள். இருந்தும், அவர் கதாபாத்திரத்தை இன்னும் நியாயமாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. முக்கிய வில்லனாக நடித்தவர் நல்ல தேர்வு.

படத்தின் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் மற்றும் பின்னணி இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு வாழ்த்துகள். இருவரும் தங்கள் பணிகளால் சிறப்பான அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றனர். முக்கியமாக, நிமிஷா அதர்வாவை மாப்பிள்ளைப் பார்க்கும்போது கேமரா நிமிஷாவை நெருங்கி விலகும் தருணத்தில் அழகாகச் சிரிப்பார். அற்புதம். பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இன்னொரு இடம் கிளைமேக்ஸில் நிமிஷாவுக்கான குளோஸ் அஃப் காட்சியில் ஜிப்ரானின் பின்னணி இசை ரசிகர்களிடம் உணர்ச்சிகளை வேகமாகக் கடத்துகிறது. எடிட்டர் சபு ஜோசஃப்-க்கும் பாராட்டுகள். பிற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பணிகளையே செய்திருக்கின்றனர்.

ஒரு சுவாரஸ்யமான கிரைம் த்ரில்லர் படம் வெற்றி பெறலாம். அதில், உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி எமோஷனல் திரில்லராக மாற்றி இன்னும் அழுத்தமான வெற்றியைப் பெறலாம். டிஎன்ஏ இதில் இரண்டாம் வகை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments