தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது...
கடந்த 2001 பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
விஜய்க்கும் எனக்கும் தலைமுறை இடைவெளி உள்ளது. விஜய்யை சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவரைப் பார்த்து எனக்கு என்ன பொறாமை? என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர். ஆகியோரின் சாதனைகளைவிட அதிக சாதனைகளை விஜய் செய்துவிட்டார்.
Advertisement
மத்திய பாஜக, மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் சினிமா துறையில் இருந்து வந்து, அதில் எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. மக்கள் மத்தியில் விஜய் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். இரண்டு ஆண்டுகள் விஜய்யை ஆட்சி செய்ய விடவேண்டும்.
அவருடைய ரசிகர்கள் தொண்டர்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் தவறு, நேரடியாக விஜய்யை பாதிக்கும்.
60 ஆண்டுகள் திராவிட கட்சிகளை மக்கள் பார்த்துவிட்டார்கள். மாற்றம் தேவைப்பட்டது விஜய் வந்தார், சினிமா புகழ் அவருக்கு கைக்கொடுத்துள்ளது. இளைஞர்கள், பெண்கள், சமூக வலைதளம் ஆகியவை அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது” என்றார்.
கடந்த 2001 பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பீர்களா என்ற கேள்விக்கு, “100% வெற்றி பெற்றிருப்பேன், சந்தேகமே வேண்டாம்” என்றார்.