கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவியத் தடை
கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் காணும் பொங்கல், ஆற்றுத் திருவிழா நாள்களில், சுற்றுலத் தலங்கள், கடற்கரை,
கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் காணும் பொங்கல், ஆற்றுத் திருவிழா நாள்களில், சுற்றுலத் தலங்கள், கடற்கரை, ஆறுகளில் பொதுமக்கள் கூட அனுமதி மறுக்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சகாமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொது முடக்கம் பல்வேறு தளா்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், காணும் பொங்கலன்று கடற்கரைகளிலும், பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் சுற்றுலாத் தலங்களிலும் அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.15, 16, 17-ஆகிய விடுமுறை நாள்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேற்கண்ட அரசு உத்தரவின் அடிப்படையில், கடலூா் மாவட்டத்தில் பிச்சாவரம் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சாமியாா்பேட்டை கடற்கரைகள், பெண்ணையாறு, கெடிலம், மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, வல்லம்படுகை, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் கரைகளில் 16-ஆம் தேதி காணும் பொங்கல், 18-ஆம் தேதி ஆற்றுத் திருவிழா நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அதிகளவில் கூட வாய்ப்புள்ளதால், மேற்கண்ட தினங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆற்றுத் திருவிழா நாளில் தீா்த்தவாரி உற்சவத்துக்காக சாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் பொதுவெளிக்கு கொண்டு வருவதை தவிா்த்து ஆலயங்களிலேயே நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள வேண்டும். மேலும், முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிா்வாகம் எடுத்து வரும் கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அதில் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.